2015-08-31 16:23:00

பிரிவுச்சுவருக்கு எதிராக, முன்னாள் முதுபெரும் தந்தை


ஆக.31,2015. இந்த பூமி எங்களுக்குச் சொந்தமானது. இஸ்ரேல் அரசும், நீதி மன்றமும் என்ன சொன்னாலும் சரி, இந்த பூமி ஒருநாள் எங்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை, முன்னாள் முதுபெரும் தந்தை, Michel Sabbah அவர்கள், இஸ்ரேல் அரசின் படைவீரர்களிடம் கூறினார்.

பாலஸ்தீனா நாட்டின் ஆக்ரமிக்கப்பட்டப் பகுதியிலிருந்து எருசலேம் நகரைப் பிரிக்கும் வகையில், இஸ்ரேல் அரசு எழுப்பிவரும் பிரிவுச் சுவருக்கு எதிராக, நூற்றுக்கணக்கான மக்கள், இஞ்ஞாயிறன்று மேற்கொண்ட போராட்டத்தில், முன்னாள் முதுபெரும் தந்தை Michel Sabbah அவர்கள் பங்கேற்ற வேளையில், இவ்வாறு கூறினார்.

மேலும், துப்பாக்கிகளை ஏந்தியதால் நீங்கள் சக்திவாய்ந்தவர்கள் என்று தோற்றமளிக்கலாம், ஆனால், உண்மையில், மனிதாபிமானம் என்ற புண்ணியத்தில் நீங்கள் சிறிதும் சக்தி வாய்ந்தவர்கள் அல்ல என்றும், முன்னாள் முதுபெரும் தந்தை, வீரர்களிடம் எடுத்துரைத்தார்.

82 வயதான முன்னாள் முதுபெரும் தந்தை Michel Sabbah அவர்கள், 1988ம் ஆண்டு முதல், 2008ம் ஆண்டு முடிய, 20 ஆண்டுகள், எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையாகப் பணியாற்றினார்.

2002ம் ஆண்டு, இந்தப் பிரிவுச் சுவர் கட்டும் பணிகள் துவங்கியபோது, பல்வேறு உலக நாடுகளின் கண்டனங்களையடுத்து, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டிருந்தது என்றும், மீண்டும், இந்த ஆண்டு ஜூலை மாதம், அப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன என்றும், ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.