2015-08-29 13:56:00

பொதுக்காலம் 22ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


முனிவர்கள் பலர் வாழ்ந்துவந்த ஓர் ஆசிரமத்தில், நாள் தவறாமல் பூஜைகள் நிகழ்ந்தன. அந்த ஆசிரமத்தின் தலைவர், ஒரு பூனையை வளர்த்துவந்தார். வெள்ளை நிறம் கொண்ட அந்தப் பூனைக்கு, முன்னிரு கால்கள் மட்டும், சாம்பல் நிறத்தில் இருந்தன. பூஜை நேரங்களில், அப்பூனை குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தது. எனவே, ஆசிரமத் தலைவர், அப்பூனையை, பூஜை மண்டபத்தில் இருந்த ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார். ஒவ்வொரு நாளும், பூஜை ஆரம்பித்ததும், பூனையும் அங்கு வந்ததால், அது வந்ததும், அதைத் தூணில் கட்டி வைத்துவிட்டு, பூஜை துவங்கியது.

சில மாதங்கள் கழித்து, அந்த ஆசிரமத் தலைவர் திடீரென காலமானார். மற்றொருவர் அப்பொறுப்பை ஏற்றார். தலைவர் இறந்தபிறகு, அவரால் வளர்க்கப்பட்டப் பூனை, பூஜை மண்டபத்திற்குச் செல்வதை நிறுத்தியது. ஆனால், ஆசிரமத்தில் இருந்தவர்கள், ஒவ்வொரு நாளும், பூனையைத் தேடி கண்டுபிடித்து, அதைக் கொண்டுவந்து ஒரு குறிப்பிட்டத் தூணில் கட்டியபிறகே தங்கள் பூஜையைத் துவக்கினர்.

இன்னும் ஓராண்டு கழித்து, அந்தப் பூனையும் இறந்தது. ஆசிரமத்தில் இருந்தவர்கள், அடுத்த நாள், பூஜையைத் துவக்குவதற்கு முன், மற்றொரு பூனையைத் தேடி, ஊருக்குள் சென்றனர். அதுவும், இறந்துபோன பூனையைப் போலவே, வெள்ளை நிறத்தில் உடலும், முன்னிரு கால்கள் சாம்பல் நிறத்திலும் உள்ள பூனையை, பல இடங்களில் தேடி, அலைந்து கண்டுபிடித்தனர். புதியப் பூனையை, ஆசிரமத்திற்குக் கொண்டுவந்து, முந்தின பூனை கட்டப்பட்டிருந்த அதேத் தூணில், அதைக் கட்டியபிறகே, தங்கள் பூஜையை ஆரம்பித்தனர்.

பல ஆண்டுகள் சென்றபின், அந்த ஆசிரமத்தில் இருந்த முனிவர்கள் பலரும், வேறு இடங்களுக்கு மாறிச் சென்றனர், புது முனிவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். ஆனால், அந்த ஆசிரமத்தில், மாறாமல் காப்பாற்றப்பட்ட ஒரே ஒரு மரபு, பூனை மரபு... பூனை இல்லாமல் அந்த ஆசிரமத்தில் பூஜை இல்லை, என்ற சட்டம் வகுக்கப்பட்டது. அச்சட்டமும் மிக நுணுக்கமாக வகுக்கப்பட்டது. எவ்வகைப் பூனையை வாங்கவேண்டும், அந்தப் பூனையை, பூஜை மண்டபத்தில், எந்தத் தூணில் கட்டவேண்டும், என்று... ஒவ்வோர் ஆண்டும், இச்சட்டத்தில், பல நுணுக்கங்கள் இணைக்கப்பட்டன. பூஜைக்கும், பூனைக்கும் உள்ள பிரிக்கமுடியாதத் தொடர்பைக் குறித்து, பக்கம், பக்கமாகப் பல நூல்கள் எழுதப்பட்டன.

புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவரான அருள்பணி, அந்தனி டி மெல்லோ அவர்கள் எழுதிய, 'The Song of the Bird' என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது.

பூஜைக்கு இடையூறாக இருந்ததால் தூணில் கட்டப்பட்டது, பூனை. ஆனால், நாளடைவில், பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற நிலைக்கு அந்த ஆசிரமத்தினர் தள்ளப்பட்டனர். பூனை, பூஜைக்கு இடையூறாக இருந்ததென்ற ஆரம்பம் மறக்கப்பட்டது. அதற்கு முற்றிலும் மாறாக, பூஜை செய்வதற்கு, பூனை தேவைப்பட்டது. பூனையைவிட பூஜை முக்கியம் என்பது மறக்கப்பட்டு, பூஜையைவிட பூனை முக்கியம் என்ற நிலை உருவானது. மரபுகளுக்கு உள்ள சக்தி இது.

நமக்குத் தேவை என்று நாம் ஆரம்பிக்கும் பழக்க வழக்கங்கள், மரபாக, மந்திரச் சடங்காக மாறும்போது, அந்த மரபைப் பாதுகாக்க நாம் தேவை என்ற நிலையை உருவாக்கிவிடும். “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை” (மாற்கு 2:27) என்று இயேசு கடிந்துகொண்டது நமக்கு நினைவிருக்கலாம். இன்றைய நற்செய்தியில் மரபு பற்றிய விவாதம் எழுகிறது... கழுவாதக் கைகளுடன் இயேசுவின் சீடர்கள் உண்பது, பெரும் சர்ச்சையை உருவாக்குகிறது.

சம்பிரதாயக் கழுவுதல் (Ritual Washing) என்பது யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் வரிகள், இதனை உறுதி செய்கின்றன:

மாற்கு நற்செய்தி 7: 3-4

பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

இந்த அளவு, முக்கியத்துவம் பெற்ற கழுவுதல் சடங்கைச் செய்யாமல், இயேசுவின் சீடர்கள் உண்டதை, பரிசேயரும், மறைநூல் அறிஞர், அதுவும், எருசலேம் என்ற தலைமைப் பீடத்தில் இருந்துவந்த அறிஞரும், கண்டு அதிர்ச்சி அடைந்தனர், தவறைச் சுட்டிக்காட்டினர் என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. கழுவாதக் கைகளுடன் சீடர்கள் சாப்பிட்ட நிகழ்வு, கழுவாதக் கைகளுடன் கர்ணன் தர்மம் செய்த கதையை நினைவுக்குக் கொணர்கிறது.

ஒருமுறை, கர்ணன், குளிப்பதற்கு முன், தன் இடது கையில் பிடித்திருந்த ஒரு தங்கக் கிண்ணத்திலிருந்து எண்ணெயை வலது கையில் ஊற்றி, உடலெங்கும் தேய்த்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் ஓர் அந்தணர் அவரிடம் வந்து, யாசகம் கேட்டார். உடனே, கர்ணன், தன் இடது கையால், தங்கக் கிண்ணத்தை அந்தணர்க்குத் தர்மமாகக் கொடுத்தார். அந்தணர் உடனே, "கர்ணா, இடது கையால் தர்மம் கொடுத்தால், கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் தீங்குவரும் என்று நமது சாஸ்திரம் சொல்கிறது. எனவே, கையைக் கழுவிவிட்டு, உன் வலது கையால் தர்மம் கொடு" என்று கேட்டுக்கொண்டார். கர்ணன் ஒரு புன்சிரிப்புடன், "அந்தணரே, அந்த சாஸ்திரம் எனக்கும் தெரியும். ஆனால், நான் இடது கையிலிருந்து வலது கைக்கு கிண்ணத்தை மாற்றுவதற்குள், என் மனம் மாறிவிடலாம் அல்லவா? எனவேதான், தர்மத்தை உடனே செய்தேன்" என்று பதில் சொன்னார். வலது கையால் கொடுத்தால்தான் தர்மமா? கொடுக்கின்ற தர்மத்தை விட, அதை இவ்வாறுதான் கொடுக்கவேண்டும் என்று நாம் வகுத்துக்கொண்ட சாஸ்திரங்கள் முக்கியமாகிப் போகும்போது, தர்மமே தொலைந்து போகும் ஆபத்து உள்ளது.

துபாய் கடற்கரையில் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு துயர நிகழ்வை, அப்பகுதியில் காவல்துறை அதிகாரியாக இருந்த ஒருவர், அண்மையில் ஊடகங்களில் பகிர்ந்துகொண்டது, இம்மாதத் துவக்கத்தில் செய்தியாக வெளியானது.

நடுத்தர வயதுடைய ஒருவர், தன் குடும்பத்துடன், துபாய் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது 20 வயது மகள், திடீரென, அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அப்பெண் உதவிக்காக குரல் எழுப்பினார். இத்தகைய ஆபத்துக்களில் அவசர உதவி செய்வதற்காக, கடற்கரையில் நியமிக்கபட்டிருந்த இரு காவல் வீரர்கள், உடனே கடலில் இறங்கி, அப்பெண் இருந்த திசை நோக்கிச் சென்றனர். அவர்களை, அப்பெண்ணின் தந்தை தடுத்தார்.

வயதுக்கு வந்த தன் பெண்ணை, முன்பின் அறிமுகமில்லாத இருவர் தொடுவதை, தான் அனுமதிக்க முடியாது என்று அவர்களுடன் போராடினார் தந்தை. தன் மகள் இறந்தாலும் பரவாயில்லை, அவளை, அறிமுகமில்லாத ஆண்கள் தொடக்கூடாது. அது, தங்கள் சமய மரபில் பெரும் அவமானம் என்று தந்தை, அவ்வீரர்களுடன் போராடியதால், அவரது மகள் கடலில் மூழ்கி இறந்தார். மரபைக் காப்பாற்றுவதற்காக, மகளைப் பறிகொடுத்த அந்தத் தந்தையை, காவல்துறை கைது செய்தது. தன் மகளின் உயிரைவிட, தன் சமய மரபுகள், சம்பிரதாயங்கள் பெரிது என்று எண்ணிய தந்தையைப் போல வாழும் பலரை, நாம் அவ்வப்போது சந்திக்கிறோம்.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற பல நூறு சம்பிரதாயங்கள், மரபுகள், சடங்குகள் கூடிக்கொண்டே சென்றன. இறைவனோ, தலைவர் மோசேயோ இந்த சட்டங்களைக் கூட்டவில்லை. இவற்றைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம் என்று இன்றைய முதல் வாசகத்தில் மோசே மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

இணைச்சட்டம் 4: 1-2

இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.

சேர்க்கவும் வேண்டாம், நீக்கவும் வேண்டாம், கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுங்கள் என்று மோசே கூறிய தெளிவான, எளிய முறையை மறந்துவிட்டு, அவர் தந்த கட்டளைகளில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டுபிடித்து, சிறிய, அல்லது பெரிய மாற்றங்களை உருவாக்கி, அவற்றை எழுதப்படாத மரபுகளாக, சட்டங்களாக மாற்றுவதில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முழு கவனம் செலுத்தினர். இறைவன் தந்த பத்து கட்டளைகளை சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் 613 சட்டங்களை வகுத்து வைத்தனர். (Hebrew: "613 mitzvot") (ஒரு சில மரபுகளின்படி, 685 சட்டங்கள் இயற்றப்பட்டன என்று சொல்வோரும் உண்டு.)

இதில் மற்றொரு தவறான போக்கு என்னவென்றால், நுணுக்கமான இச்சட்டங்கள், மதத்தலைவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல், மக்கள் மீது இன்னும் அதிக சுமைகளைச் சேர்ப்பதாய் இருந்தது. இதையும் இயேசு ஒருமுறை மக்களிடம் சுட்டிக்காட்டினார்: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள்.” (மத்தேயு 23 : 1-4) என்று கூறினார்.

சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், சட்டங்கள், மரபுகள் என்ற பல பாரங்களைச் சுமந்து, பழகிப்போகும் ஒரு சமுதாயம், விரைவில், இவற்றையே கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகும்போது, மக்கள் இறைவனை மறந்துவிட்டு, சட்டங்களை வணங்கும் ஆபத்து உண்டென்று இறைவாக்கினர் எசாயா ஓர் எச்சரிக்கை விடுத்தார். அந்த எச்சரிக்கையை இயேசு இன்றைய நற்செய்தியில் நினைவுறுத்துகிறார். எசாயா தந்த எச்சரிக்கை இதுதான்:

எசாயா 29 : 13

என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது: அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!

மனப்பாடம் செய்த சட்டங்களை, மந்திரங்களை உதடுகள் சொன்னாலும், உள்ளத்தில் இறையுணர்வும், மனித உணர்வும் சிறிதும் இல்லாமல் வாழமுடியும் என்பதை, விவிலிய அறிஞர் William Barclay அவர்கள், ஒரு குட்டிக் கதை மூலம் கூறியுள்ளார்.

மதப் பற்று அதிகம் உள்ள ஒருவர், தன் எதிரியைக் கொல்வதற்காக அவரைத் துரத்திச் செல்கிறார். இருவரும் குதிரையில் ஏறி, பறந்து கொண்டிருக்கின்றனர். அவ்வேளையில், நண்பகல் பொது வழிபாட்டுக்காக அழைப்பு ஒலிக்கிறது. எதிரியைக் கொல்ல துரத்திச் செல்பவர் அந்த அழைப்பைக் கேட்டதும், குதிரையை விட்டு குதித்து, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, சொல்லவேண்டிய செபங்களை அவசரம் அவசரமாகச் சொல்லி முடிக்கிறார். பின்னர் மீண்டும் குதிரையில் ஏறி, கொலைவெறியோடு தன் எதிரியைத் துரத்திச் செல்கிறார். அவர் உதடுகள் அந்நேரத்தில் சொன்னது செபமா? சாபமா? தெரியவில்லை.

உதடுகளால் மட்டுமல்லாமல், உள்ளத்தாலும், தன் முழு வாழ்வாலும் இறைவனுடனும், இறைவனின் வறியோருடனும் மிக நெருங்கி வாழ்ந்த அன்னை தெரேசாவின் எண்ணங்களுடன் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். அருளாளர் அன்னை தெரேசாவின் திருநாளை, செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை, கொண்டாடவிருக்கிறோம்.

நம்மில் பலர் தொடுவதற்கே அஞ்சும் ஆயிரமாயிரம் மனிதர்களைக் குப்பைத் தொட்டிகளிலிருந்தும், சாக்கடைகளிலிருந்தும் மீட்டு, அவர்களைக் கழுவி, மருந்திட்டு, உணவூட்டி... அவர்களை மீண்டும் மனிதர்கள் என்ற நிலைக்கு உயர்த்திட இவ்வன்னை செய்த பணி, மிகக் கடினமானது. இப்பணியை அவர் 45 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தார். இவரது பணியைக் கண்டு வியந்த ஒரு பத்திரிகையாளர் இவரிடம் ஒருநாள், "உங்களால் எப்படி இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்ய முடிகிறது?" என்று கேட்டார். அன்னை அவரிடம், "நான் 18 வயதில் என் குடும்பத்தினரை விட்டு, துறவறத்தில் சேர்ந்தபோது, 'இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக் கொள்... அவருடன் நடந்துச் செல்' என்று சொல்லி, என் அம்மா என்னை வழி அனுப்பி வைத்தார்கள்... அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளன" என்று அன்னை தெரேசா பத்திரிகையாளரிடம் சொன்னார்.

அந்த அன்னையின் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் ஆயிரமாயிரம் உள்ளங்களை இறைவனை நோக்கி நடத்தியுள்ளன. உதடுகளாலும், உள்ளத்தாலும் இறைவனுக்கு நெருக்கமான அருளாளர் அன்னை தெரேசாவின் பரிந்துரையால், நாமும், நம் சொல்லாலும், செயலாலும், இறைவனை நெருங்கி வாழும் வரத்தை வேண்டுவோம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.