2015-08-29 15:23:00

ஆப்ரிக்காவில் திருஅவையின் பணிகளை விரிவாக்கும் ஒப்பந்தம்


ஆக.29,2015. ஆப்ரிக்காவில் கத்தோலிக்கத் திருஅவையின் சமூகநலப் பணிகளை மேலும் விரிவாக்க அனுமதியளிக்கும் ஒப்பந்தம் ஒன்றில், SECAM என்ற ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பும், AU என்ற ஆப்ரிக்க ஒன்றியமும் கையெழுத்திட்டுள்ளன.

ஆப்ரிக்க ஒன்றியத்தின் இசைவுக்காக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த இந்த ஒப்பந்தத்தில் SECAM தலைவர் பேராயர் Gabriel Mbilingi, ஆப்ரிக்க ஒன்றியத்தின் அரசியல் ஆணைக்குழு தலைவர் Aisha L. Abdulahi ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து Zenit ஊடகத்திடம் கருத்து தெரிவித்த, இவ்விரு தரப்பின் ஒருங்கிணைப்பு அதிகாரி Berhanu Tamene அவர்கள், ஆப்ரிக்காவில் கத்தோலிக்கத் திருஅவை, பல்வேறு மேய்ப்புப்பணிகளையும், சமூகநலப் பணிகளையும் ஆற்றி வருகின்றது, இந்த ஒப்பந்தம், ஆப்ரிக்காவில் அரசுகளோடு ஒன்றிணைந்து மேலும் பணிகள் ஆற்ற வழி அமைக்கின்றது என்று கூறினார்.

இதற்கிடையே, மத்திய ஆப்ரிக்க குடியரசில் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று, 163 சிறார் படைவீரர்களை விடுதலை செய்துள்ளது. எனினும், அந்நாட்டின் புரட்சிக் குழுக்களில், இன்னும் ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர், படைவீரர், சமையல், செய்தியை எடுத்துச் செல்பவர் என பல்வேறு வேலைகளைச் செய்கின்றனர் என்று ஐ.நா.வின் யூனிசெப் நிறுவனம் கூறியுள்ளது.    

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.