2015-08-29 15:07:00

அனைத்துலக காணாமல்போயுள்ளோர் நாள்-ஆகஸ்ட் 30


ஆக.29,2015. சண்டைகளிலும், மற்ற சூழல்களிலும் காணாமல்போயுள்ளோர் குறித்த விபரங்களை ஆவணங்களாகத் தயாரிக்கவும், காணாமல்போயுள்ளோரின் குடும்பங்களுக்கு அதிக ஆதரவு வழங்கவும் வேண்டுமென்று, அரசுகளையும் பொதுமக்கள் சமுதாயத்தையும் கேட்டுள்ளது ICRC என்ற அனைத்துலக செஞ்சிலுவை சங்கம்.

ஆகஸ்ட் 30, இஞ்ஞாயிறன்று, அனைத்துலக காணாமல்போயுள்ளோர் நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு இவ்வாறு விண்ணப்பித்துள்ள, ICRC அமைப்பின் காணாமல்போயுள்ளோர் பிரிவின் தலைவர் Marianne Pecassou அவர்கள், காணாமல்போயுள்ளோர் குறித்து தற்போது கிடைக்கும் விபரங்களைச் சேகரிப்பது பிற்காலத்தில் குடும்பங்களுக்கு உதவும் என்று கூறினார்.

சண்டைகள் நடந்துகொண்டிருக்கும்போது இவ்விபரங்களைச் சேகரிப்பது பல நேரங்களில் இயலாததாக உள்ளது, ஆயினும், சண்டைக் காலங்களில் காணாமல்போயுள்ளோரின் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவது அவசியம் என்றும் கூறினார் Pecassou.

சிரியாவில், 2011க்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய 85 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். இலங்கையில் 2009ம் ஆண்டில் முடிவுற்ற சண்டையில் காணாமல்போயுள்ள பல்லாயிரக்கணக்கானோரில் வெகு சிலர் பற்றிய விபரங்களே தெரிய வந்துள்ளன.   

ஆதாரம் : ICRC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.