2015-08-27 16:02:00

இவ்வாண்டு 2,440 அகதிகள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் - ஐ.நா.


ஆக.27,2015. 2015ம் ஆண்டு துவக்கத்திலிருந்து, 2,93,000 பேர் புலம் பெயர்ந்தோராக ஐரோப்பிய கரையை நாடிவந்துள்ளனர் என்றும், இவர்களில் 2,440 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என்றும் ஐ.நா. புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் உயர் அதிகாரி, António Guterres அவர்கள் இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆகஸ்ட் 21, 22 ஆகிய நாட்களில், மாசிடோனியா அரசு, கிரேக்க நாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்குள் தஞ்சம் புகுவோரைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஐ.நா. உயர் அதிகாரி, Guterres அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தினார் என்று ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஐ.நா. உயர் அதிகாரி, Guterres அவர்கள், பிரெஞ்ச் அரசின் உள்துறை அமைச்சர், Bernard Cazeneuve அவர்களுடன், ஜெனீவா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 2,93,000 என்ற எண்ணிக்கை, பல சிறிய ஐரோப்பிய நாடுகளால் சமாளிக்க முடியாத அளவு மிக அதிகமான எண்ணிக்கை என்று சுட்டிக்காட்டினார்.

வெவ்வேறு நாடுகளில் நிலவும் அமைதியற்றச் சூழல்களால் ஐரோப்பாவில் தஞ்சம் தேடும் புலம் பெயர்ந்தோருக்கு அடைக்கலம் தருவதோடு, அவர்களுக்கு மறுவாழ்வு தருவதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரக் கடமை என்பதை, ஐ.நா. புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் உயர் அதிகாரி, António Guterres அவர்கள் வலியுறுத்தினார். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.