2015-08-26 15:38:00

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை – குடும்ப செபத்தின் அவசியம்


ஆக.,26,2015. தன் புதன் மறைக்கல்வி உரைகளில் கடந்த சில வாரங்களாக 'குடும்பம்' குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், குடும்ப செபம் குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

செபத்தின் முக்கியத்துவம் குறித்து நாம் அனைவரும் உணர்ந்துள்ளபோதிலும், செபத்திற்கென நேரம் ஒதுக்குவது சிரமமாக இருப்பதாகத் தெரிகிறது. நம் முழு இதயத்தோடும், ஆன்மாவோடும், முழு வல்லமையோடும் இறைவனை அன்பு கூரவேண்டும் என அவர் எதிர்பார்ப்பதுபோல் நாம் அன்புகூர்கிறோமா என்ற கேள்வியை நம்மை நோக்கியே நாம் கேட்கவேண்டிய தேவை உள்ளது. செபத்தின் இதயமாக இருப்பது, கடவுளின் அன்பு. அந்த அன்பே, நம் வாழ்வின் ஆதாரம். இறைவனும் அந்த அன்பினாலேயே நம்மைத் தொடர்ந்து அவர் அரவணைக்கிறார். இறைவனின் அன்பால் நிறைந்துள்ள இதயம், ஓர் அமைதியான எண்ணத்தையோ, பக்தியின் ஒரு சிறிய அடையாளமாக, ஒரு செபத்தையோ தனக்குள் உருவாக்க இயலும். தூய ஆவியானவர், செபிக்கவும், இறைவனை தந்தை என்று அழைக்கவும், இறை அன்பில் தினசரி வளரவும், நமக்குக் கற்றுத் தருகிறார். நம் குடும்பங்களும் தூய ஆவியாரின் கொடைகளுக்காக இறைஞ்ச வேண்டிய தேவை உள்ளது. நாம் ஓய்வு நேரமின்றி தொடர்ந்து உழைக்கும்போதுகூட, செபத்தின் மூலமாக, நாம் இறைவனுக்கு, அவர் வழங்கிய நேரத்தில் கொஞ்சத்தைத் திருப்பி வழங்குவதோடு, முக்கியமானவற்றைப் பாராட்டுவதில் கிட்டும் அமைதியையும் பெறுகின்றோம். மேலும், எதிர்பாராத வகையில் நம்மை வந்தடையும் இறைவனின் கொடைகள் குறித்த மகிழ்வையும் சந்திக்கிறோம். எப்போதும் நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவை இனிய முகத்துடன் வரவேற்ற மார்த்தா, மற்றும் மரியாவின் வீட்டைப்போல், நம் வீடும், நம் தினசரி செபம் மூலம், இன்முக வரவேற்பின் இடமாக மாறுவதாக. 

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில் சிறப்பான அழைப்பு ஒன்றையும் விடுத்தார்.

செப்டம்பர் மாதம் முதல் தேதி, அதாவது வருகிற செவ்வாய்க் கிழமையன்று, சிறப்பிக்கப்படவிருக்கும் 'இயற்கையை பாதுகாப்பதற்கான உலக செப நாள்’ குறித்து நினைவூட்டிய திருத்தந்தை, இந்நாளை நம் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சகோதரர்களுடனும், நல்மனம் கொண்டவர்களுடனும் இணைந்து நாம் சிறப்பிக்க உள்ளோம் என்றார். மனித குலம் இந்நாட்களில் எதிர்நோக்கிவரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு, நம் பங்களிப்பை வழங்க ஆவல் கொண்டுள்ள இவ்வேளையில், உலகிலுள்ள தலத்திருஅவைகள் இந்நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனைச் சிறப்பிக்க பல்வேறு வழிகளில் திட்டங்களைத் தீட்டியுள்ளன எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் முதல் தேதி மாலை 5 மணிக்கு, உரோம் நகரின் தூய பேதுரு பசிலிக்காவில், திருப்பீட அதிகாரிகள் அனைவருடன் இணைந்து, தான் நிறைவேற்ற உள்ள இறைவார்த்தை வழிபாட்டில், அனைவரும் கலந்து கொள்வதற்கான அழைப்பையும் முன்வைத்தார்.

தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.