2015-08-26 16:13:00

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் 'தொழில் தின' அறிக்கை


ஆக.26,2015. மக்களுக்குத் தகுதியான வேலைகளை வழங்க இயலாத நமது பொருளாதாரத்தை சகித்துக் கொள்ளும் விரக்தியான மனநிலையிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் விடுதலை பெறவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் முதல் திங்களன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் 'Labour Day', அதாவது, 'தொழில் தினம்' சிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாண்டு, செப்டம்பர் 7ம் தேதி கொண்டாப்படவுள்ள இந்த நாளையொட்டி, அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி, மனித முன்னேற்றம் பணிக்குழுவின் தலைவர், பேராயர், Thomas Wenski அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் புரிவோருக்கு தகுதியான மாண்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு, அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்கக் வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்ற தன் திருமடலில் கூறியுள்ள கருத்தை, பேராயர் Wenski அவர்கள் தன் செய்தியின் துவக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

காயப்பட்டிருக்கும் நமது உலகமும், மனித சமுதாயமும் - குடும்பங்களுக்குத் தேவைப்படும் உதவிகள் - நாம் முன்னேறிச் செல்லும் பாதை என்ற மூன்று கருத்துக்களில், பேராயர் Wenski அவர்கள், தன் 'தொழில் தின' செய்தியை வழங்கியுள்ளார்.

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.