2015-08-25 15:48:00

இயற்கையியல் எண்ணத்தில் மாற்றம் அவசியம், கர்தினால் டர்க்சன்


ஆக,25,2015. இயற்கையியல், சுற்றுச்சூழல்இயல், படைப்பு ஆகியவை குறித்த சிந்தனைகளிலும், எண்ணங்களிலும் அடிப்படையான மாற்றம் அவசியம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பெரு நாட்டுத் தலைநகர் லீமாவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள காலநிலை குறித்த ஐந்து நாள் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியுள்ள, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

வருகிற நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை பாரிசில் நடைபெறவிருக்கின்ற காலநிலை குறித்த உச்சி மாநாட்டிற்குத் தயாரிப்பாக, பெரு நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்தும் இக்கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியுள்ள, கர்தினால் டர்க்சன் அவர்கள், சுற்றுச்சூழலியல் குறித்த விவகாரங்களில் பெரிய அளவில் மனமாற்றம் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயத்தின் ஒருங்கிணைந்த மனமாற்றம் வழியாக மனிதரையும், சுற்றுச்சூழலையும் பிணைப்பதற்கு ஆதரவான புதிய சுற்றுச்சூழல்இயல் ஆன்மீகத்தை ஆரம்பிக்குமாறு இக்கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டார் கர்தினால் டர்க்சன்.

இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், "Laudato Si'' அண்மை திருமடல் குறித்த சிந்தனைகளும் இடம்பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.