2015-08-25 16:07:00

ஆசியா பீபியைச் சந்திப்பதற்கு தந்தைக்கு நீதிமன்றம் அனுமதி


ஆக,25,2015.  பாகிஸ்தானில் தெய்வநிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் பெண் ஆசியா பீபி அவர்களை, அவரின் தந்தை சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

ஆசியா பீபியின் தந்தை Soran Masih அவர்கள் தனது மகளை சிறையில் சந்திப்பதற்கு அனுமதி கேட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த இரு நாள்களுக்குப் பின்னர், நீதிபதி Muhammad Anwar ul Haq அவர்கள் பஞ்சாப் மாநில அரசுக்கும், காவல்துறைக்கும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு குறித்து இச்செவ்வாயன்று UCA செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆசியா பீபியின் தந்தை வழக்கறிஞர் Sardar Mushtaq Gill அவர்கள், தங்களின் மனுவுக்கு விரைவில் நடவடிக்கை எடுத்த உயர் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

இறைவாக்கினர் முகமது அவர்களை அவமதித்தார் என்று தெய்வநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்ட, ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான ஆசியா பீபிக்கு 2010ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையிலிருக்கும் ஆசியா பீபியை அவரின் தந்தை சந்திப்பதற்கு இதுவரை அனுமதி மறுக்கப்பட்டதற்குரிய காரணத்தை அறிவிக்க சிறை அதிகாரிகளும், மாநில அரசும் மறுத்தே வந்துள்ளனர்.

இதற்கிடைய, ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனு நிலுவையிலேயே உள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.