2015-08-25 15:32:00

Waldensian-Methodist கிறிஸ்தவ கூட்டமைப்புக்கு செய்தி


ஆக,25,2015. அனைத்துக் கிறிஸ்தவர்களும் நேர்மையான இதயத்தோடு முழு ஒன்றிப்புக்காக முயற்சிப்பதற்கு நம் ஆண்டவரிடம் தான் செபிப்பதாக, Waldensian-Methodist கிறிஸ்தவ சபையினருக்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் தூரின் நகருக்கு அருகில் மாமன்றத்தை நடத்திவரும் Waldensian-Methodist கிறிஸ்தவ சபையினருக்கு அனுப்பியுள்ள செய்தியில், கிறிஸ்தவ சபையினர், மனித சமுதாயத்திற்கு ஆற்றும் பணியில் ஒன்றிணைந்து உழைத்து இயேசு கிறிஸ்துவுக்கும், அவரின் நற்செய்திக்கும் சான்று பகருவதற்குத் தான் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகில் மனித மாண்பை பாதுகாப்பதிலும், நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதிலும், பலரை, குறிப்பாக, ஏழைகளையும் நலிந்தவர்களையும் பாதித்துள்ள துன்பங்களை அகற்றுவதிலும் கிறிஸ்தவ சபையினர் ஒன்று சேர்ந்து உழைத்து கிறிஸ்துவுக்குச் சான்று பகர வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

வருகிற வெள்ளியன்று நிறைவடையும் Waldensian-Methodist கிறிஸ்தவ சபை மாமன்றத்திற்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

Waldensian-Methodist கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு, Waldensian Evangelical சபையும், இத்தாலிய மெத்தடிஸ்ட் சபையும் இணைந்து 1975ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் ஐம்பதாயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் முப்பதாயிரம் இத்தாலியர் உட்பட 45 ஆயிரம் பேர் Waldensian கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள். எஞ்சியுள்ள 15 ஆயிரம் பேர் ஆர்ஜென்டினா மற்றும் உருகுவாய் நாட்டினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.