2015-08-25 16:13:00

Stockholmல் உலக தண்ணீர் வாரக் கருத்தரங்கு


ஆக,25,2015. கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை அதிகமாக எதிர்கொள்ளும் அண்மை கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகள் நீர் வளங்களைத் திறமையாகக் கையாள்வதற்கு செயற்கைகோள் படங்கள் வழியாக உதவ திட்டமிட்டிருப்பதாக ஐ.நா. வேளாண்மை நிறுவனம் கூறியது.

சுவீடன் நாட்டின் Stockholmல் இத்திங்களன்று தொடங்கியுள்ள உலக தண்ணீர் வாரக் கருத்தரங்கில் இத்தகவலை வெளியிட்ட, FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், வேளாண்மைக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நாடுகளுக்கு நீர்வள ஆதாரங்கள் குறித்த விபரங்களைக் கொடுத்து உதவ இருப்பதாக அறிவித்தது.

இக்காலத்தில் உலக அளவில் 70 விழுக்காடும், பல வளரும் நாடுகளில் 95 விழுக்காடு வரையும் நல்ல தண்ணீர் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இந்த உலக தண்ணீர் வாரக் கருத்தரங்கில், உலகின் அறிவியல், தொழில், அரசு மற்றும் பொது நிறுவனங்களைச் சேர்ந்த ஏறக்குறைய மூவாயிரம் தலைவர்களும், வல்லுனர்களும் கலந்து கொள்கின்றனர்.

1990ம் ஆண்டிலிருந்து இதுவரை உலகில் 260 கோடிப் பேருக்கு நல்ல தண்ணீர் கிடைத்துள்ளது. ஆயினும், 66 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு இன்னும் சுத்தமான தண்ணீர் தேவைப்படுகிறது. இன்னும் 15 ஆண்டுகளில் உலகம் 40 விழுக்காடு தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் என்று கூறப்படுகின்றது.   

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.