2015-08-25 16:07:00

2050க்குள் இந்தியா அளவிலான காடுகள் அழிக்கப்பட்டுவிடும்


ஆக,25,2015. மனிதர்கள் காடுகளை அழித்துவரும் தற்போதைய நிலை தொடர்ந்தால், 2050ம் ஆண்டுக்குள் இந்தியா அளவிலான காடுகள் அழிக்கப்பட்டுவிடும் என புதிய அறிக்கை ஒன்று எச்சரிக்கின்றது.

இந்தக் காடுகள் அழிவினால் 100 ஜிகா டன்களுக்கு மேற்பட்ட அளவிலான கார்பன் டை ஆக்ஸைடு வளிமண்டலத்தை நிரப்பும் என்று CGD என்ற உலகளாவிய வளர்ச்சி மையம் இத்திங்களன்று வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.

காடுகள் அழிவைத் தடுப்பதற்குப் புதிய கொள்கைகள் வரையறுக்கப்படவில்லையெனில், 28 கோடியே 90 இலட்சம் ஹெக்டர் அளவிலான வெப்பமண்டல காடுகள் இருக்குமிடம் தெரியாமல் அழிந்துவிடும் எனவும், இந்த அளவு, இரண்டாயிரமாம் ஆண்டில் உலகிலிருந்த காடுகளின் அளவில் ஏழில் ஒரு பாகத்திற்குச் சமம் எனவும் இவ்வறிக்கை கூறுகிறது. 

அழிக்கப்படும் இந்தக் காடுகள் வெளியேற்றும் 169 ஜிகா டன் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, மனிதர் காலநிலையை 2 செல்சியுசுக்குக் குறைவாக வைத்திருக்க விரும்பி அவர்கள் வெளியேற்றக்கூடிய கார்பன் டை ஆக்ஸைடின் அளவில் ஆறில் ஒரு பாகத்திற்குச் சமம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. 

இப்போதைய நிலை தொடர்ந்தால், அடுத்த 35 ஆண்டுகளுக்குள் உலகில், இந்தியா அளவிலான காடுகள் அழிக்கப்பட்டுவிடும் என்று இவ்வறிக்கை எச்சரிக்கின்றது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.