2015-08-24 16:09:00

வாரம் ஓர் அலசல் – அடிமைமுறை ஒழிப்புக்கு நம் பங்கு என்ன?


ஆக.24,2015. ஒரு நாள் மாலை, சில ஆப்ரிக்க கறுப்பு இன வர்த்தகர்களோடு மதுபானம் அருந்துவதற்கு நான் அழைக்கப்பட்டேன். நான் அவர்களோடு மது அருந்திவிட்டு அங்கிருந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் என்னைக் கைது செய்வதற்கு அவர்கள் முயற்சி செய்தனர். நான் அவர்களோடு போராடி அவர்கள் பிடியிலிருந்து மீண்டு நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் பழக்கி வைத்திருந்த கொடூரமான நாய் என்னைப் போகவிடவில்லை. எனவே நான் அவர்களிடம் சரணடைய கட்டயாப்படுத்தப்பட்டேன். இப்படிப்பட்ட மனிதமற்ற விளையாட்டுக்காக இப்படி சில நாய்களை அவர்கள் பழக்கி வைத்திருந்தனர்.  

எனது அண்டை வீட்டார் அழைத்ததன்பேரில் ஒருநாள் மாலையில் அவர்களைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் நான் கடத்தப்பட்டேன். நான் எனது குழந்தையோடு அடிமையாக ஒருவரிடம் விற்கப்பட்டேன். பின்னர் அந்தக் கப்பலில் நான் ஏற்றப்படும்வரை பல ஆள்களிடம் மாறி மாறி விற்கப்பட்டேன். இதேபோல் ஓர் ஆணும், அவர் மகனும் தங்கள் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துகொண்டிருந்தபோது, தங்களைக் கடத்தல்காரர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சிலரால் கடத்தப்பட்டனர்.

அன்பு நேயர்களே, 16ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக நடந்த ஆப்ரிக்க அடிமை வர்த்தகத்தில், ஆப்ரிக்க மனித வர்த்தகர்கள், ஐரோப்பிய மனித வர்த்தகர்களுக்கு இப்படித்தான் ஆள்களைப் பிடித்துக் கொடுத்தனர். உள்நாட்டில் வாழும் ஓர் ஆப்ரிக்கரை தன்னை வந்து பார்க்குமாறு நட்பு முறையில் முதலில் அழைப்பு விடுத்து, அவரை தனது விருந்தாளியோடு நன்றாக வரவேற்று விருந்தளித்த பின்னர், அந்த விருந்தாளியிடம் இந்த ஆப்ரிக்கருக்கு  அந்தக் கப்பலைக் காட்டுமாறு சொல்வார். இதில் சந்தேகப்படாத அந்த அப்பாவி ஆப்ரிக்கர் ஆவலோடு அந்த மனிதர் பின்னால் செல்வார். அவர் வியப்போடு கப்பலைப் பார்த்துக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து, அந்தக் கப்பலில் மறைந்து இருக்கும் ஆப்ரிக்க மனித வர்த்தகர்கள் அந்த மனிதரை இழுத்து உடனடியாக விற்று விடுவார்கள். ஆப்ரிக்காவில் நிலவிய நோய்கள் மற்றும் அம்மக்களை நேரடியாகச் சந்திக்க அஞ்சிய ஐரோப்பிய மனித வர்த்தகர்கள், ஆப்ரிக்காவின் உள்பகுதிக்குச் செல்லாமல், கடற்கரைகளிலே ஆப்ரிக்க மனித வர்த்தகர்களைத் தரகர்களாகப் பயன்படுத்தி தங்களின் மனித வர்த்தகங்களை நடத்தினர். நோயற்ற, உடல் உறுப்புகள் பாதிப்பின்றி, வலிமையுடன் உள்ள ஆப்ரிக்கர்களை விலைக்கு வாங்கினர். 1760ம் ஆண்டில் ஆப்ரிக்க கடற்கரைகளில் 14 பிரித்தானிய பவுண்டுகளுக்கு வாங்கப்படும் ஓர் ஆப்ரிக்க அடிமை, அமெரிக்கச் சந்தையில் 45 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டார். இப்படி அடிமைகளாக அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் விற்கப்பட்ட ஆப்ரிக்க அடிமைகள் பெரும்பாலும் ஏமாற்றிக் கடத்தப்பட்டவர்களே. இந்த அடிமைகளை கை கால்கள் மற்றும் கழுத்தை இரும்புச் சங்கிலிகளால் கட்டி, ஓர் அடிமையோடு மற்றோர் அடிமையை சங்கிலியால் பிணைத்து கப்பல்களின் கீழ்தளத்தில் அடைத்து வைத்து எடுத்துச் சென்றனர். ஒவ்வோர் ஆண்டும் எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட மேற்கு ஆப்ரிக்கர்கள் அட்லாண்டிக் பெருங்கடல் வர்த்தகத்தில், புதிய கண்டத்திற்கு வந்த பின்னர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையிலே வாழ்ந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இந்த அட்லாண்டிக் பெருங்கடல் கடும் பயணத்தில் பலர் இறந்து விடுவர். எஞ்சியவர்களில் 40 விழுக்காட்டினர் கரீபியன் தீவுகளிலும், 38 விழுக்காட்டினர் பிரேசிலிலும், 17 விழுக்காட்டினர் இஸ்பானிய அமெரிக்காவிலும், 6 விழுக்காட்டினர் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் விற்கப்பட்டனர்.

மருத்துவர் Alexander Falconbridge அவர்கள், 1788ம் ஆண்டில், ஆப்ரிக்க அடிமை வர்த்தகம் பற்றி வெளியிட்ட நூல் ஒன்றில் இந்த விபரங்கள் உள்ளன. 1700களின் இறுதியில் மேற்கு ஆப்ரிக்காவுக்கும், கரீபியன் பகுதிக்கும் இடையே நடந்த அடிமை வர்த்தகத்தில், அடிமைகளை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்களில் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றியவர் இவர். அந்நேரங்களில் பல ஆப்ரிக்க அடிமைகள் தன்னிடம் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகளையே இவர் புத்தகமாக எழுதியுள்ளார். அக்காலத்தில் அடிமை வர்த்தகம் ஆதாயம் ஈட்டும் ஒரு தொழிலாகவே இருந்து வந்தது. புதிய கண்டமாகிய அமெரிக்காவில் கரும்புத் தோட்டம், புகையிலை மற்றும் பருத்திப் பண்ணைகளிலும், கனிமச் சுரங்களிலும் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். இதற்காக வெள்ளையின ஐரோப்பியர்கள், கறுப்பின ஆப்ரிக்கர்களை விலைக்கு வாங்கினர். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் காலனி ஆதிக்க ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லப்பட்டன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே உலகில் நடைமுறையில் இருந்த  அடிமைமுறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்து, அடிமை முறையைக் கொண்டிருந்த பேரரசுகள் 1400 ஆண்டுகள் நீடித்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.

1730ம் ஆண்டில் 15 கப்பல்கள் மட்டும் ஆப்ரிக்க அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தன. 1792ம் ஆண்டில் அது 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை வர்த்தகம் அமோகமாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் ஈட்டியது. 1790ல் அமெரிக்காவில் 6 இலட்சத்து 97 கறுப்பின அடிமைகள் இருந்தனர். இது 1861ல் 40 இலட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தகைய கொடூரமான அடிமைமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று 1791 ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதிக்கும் 23ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் தற்போதைய ஹெய்ட்டி மற்றும் தொமினிக்கன் குடியரசு நாடுகள் அமைந்துள்ள Santo Domingoவில் அடிமைகள் கிளர்ந்தெழுந்தனர். இக்கிளர்ச்சியையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வர்த்தகத்தைத் தடைசெய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்காவில் சிலே நாட்டில் 1823ம் ஆண்டிலும், ஈக்குவதோரில் 1854லும், பிரேசிலில் 1888லும், தொமினிக்கன் குடியரசில் 1844லும், இஸ்பெயினில் 1837லும்  அடிமைமுறை தடை செய்யப்பட்டது. அதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆப்ரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே நடந்துவந்த அடிமை வர்த்தகத்தை நிறுத்திக்கொண்டன. இந்தக் கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவுகூரும் வகையில், அடிமை வர்த்தக ஒழிப்பை நினைவூட்டும் பன்னாட்டு நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 23ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ 1997ம் ஆண்டில் உருவாக்கியது. இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட இந்த நாளன்று, ஆப்ரிக்க அடிமை மக்களை நினைவுகூரும் பத்தாண்டும் ஐ.நா.வால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் ஒரு நிரந்தர நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தினம் பற்றிப் பேசிய, ஐ.நா.வின் பொதுத் தகவல் பிரிவின் இந்நினைவு தின திட்ட அமைப்பாளர் Omyma David அவர்கள், அக்காலத்தில் 400க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இடம்பெற்ற ஆப்ரிக்க அடிமை வர்த்தகத்தில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ஆப்ரிக்கர்கள் விற்கப்பட்டனர். இவ்வெண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம். இது மனித சமுதாயத்திற்கு எதிரான குற்றம், மனித சமுதாயத்தின்மீது படிந்துள்ள கறை. இந்த வரலாற்றுத் தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருக்கவும், மக்கள் மத்தியில் சகிப்புத்தன்மையையும், ஒருவர் ஒருவரை மதிப்பதையும் ஊக்குவிக்கவும் இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.

அன்பர்களே, அடிமை முறை சட்டத்தின்படி நாடுகளில் ஒழிக்கப்பட்டிருந்தாலும், இன்றும், கொத்தடிமை, சிறு வயது திருமணம், கட்டாயத் தொழில், பாலியல் அடிமைகள், மனித வர்த்தகம் போன்ற நவீன அடிமை முறைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இஞ்ஞாயிறன்று வெளியான ஒரு செய்தி இதற்குச் சான்றாய் உள்ளது. தாய்லாந்து எல்லைப் பகுதியில் மேலும் அதிகமான மனிதப் புதைகுழிகளைக் கண்டுபிடித்துள்ளதாக மலேசியக் காவல்துறையினர் கூறியுள்ளனர். மிகவும் அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றிலிருந்து மட்டும் 24 சடலங்களைத் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகக் கூறும் மலேசிய காவல்துறையினர், அந்தப் பகுதி வழியே வறுமையின் காரணமாக மியான்மாரில் துன்புறுத்தலுக்கு பயந்து வெளியேறும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள், மனிதக் கடத்தல்காரர்களால் கடத்தப்படும் பாதையாகவும் உள்ளது எனவும் கூறுகின்றனர். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளுக்கு அருகிலேயே கடந்த மே மாதம் 139 குடியேற்றதாரர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் ஏறக்குறைய எண்பது இலட்சம் மக்கள் அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளால் வரலாற்று நினைவுச் சின்னங்களும், புதைபொருள் ஆய்வு இடங்களும் பெருமளவில் திட்டமிட்டு கொடூரமாய் அழிக்கப்பட்டு வருவதாக யுனெஸ்கோ இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள் கூறியுள்ளார்.

அன்பு நேயர்களே, இறைவனின் சாயலாக உள்ள மனிதரின் மனிதத்தைச் சிதைக்கும் அடிமை முறையை ஒழிப்பதற்கு மதங்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சித்து வருகின்றனர். மனித வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இது ஒழிக்கப்படுவதற்குச் செபிக்கவும் அழைப்பு விடுக்கும் வலைத்தளம் ஒன்றை, சிங்கப்பூர், மலேசியா, புருனெய் ஆகிய நாடுகளின் துறவிகள் அவை தொடங்கியுள்ளது. செபமாலையை இதற்கு ஆயுதமாகக் கொண்டிருக்குமாறு அந்த அவை கேட்டுள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள், அடிமைமுறை ஒழிப்பை ஆதரிக்கும் அறிக்கை ஒன்றில், உலக மதங்களின் தலைவர்கள் வத்திக்கானில் ஒன்றுகூடி கையெழுத்திட்டனர். 100 ரூபாய் திருடியவர் சிறையிலும், 100 கோடி ரூபாய் திருடியவர் அடுக்குமாடியிலும் ஆனந்தமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் காலம் இது. அன்பர்களே, இம்மண்ணைவிட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் மகாத்மாக்களாய் வணங்கப்படுபவர்கள், எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவரையும் அன்புகூர்ந்து, அனைவரின் மனிதத்தை மதித்து வாழ்ந்தவர்களே. எனவே நாமும் வீட்டுக்குள்ளும், வெளியிலும் மதங்கள் கடந்து மனிதர்களாய் மாறி மனிதம் வளர்ப்போம். நாம் எப்போது எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களை உண்மையிலேயே அன்புகூரத் தொடங்குகின்றோமோ அப்போதுதான் நம்மில் மனிதம் மலரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.