2015-08-24 16:00:00

கடுகு சிறுத்தாலும்–எதை அடைய விரும்புகிறோம் என்பது முக்கியம்


புத்தர் ஒரு கிராமத்தில் போதித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் அவரிடம் சென்று, ஒவ்வொரு மனிதரும் விண்ணகத்தை அடைய முடியும் என்று ஒவ்வொரு நாளும் கூறுகிறீர்கள், ஆனால் ஏன் எல்லாரும் விண்ணகத்தை அடைவதில்லை என்று கேட்டார். புத்தர் அந்த மனிதரிடம், நண்பரே, இன்று ஒரு வேலை செய்யுங்கள். ஊருக்குள் சென்று எல்லாரிடமும், அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்று அறிந்து, ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள், ஒவ்வொருவருடைய பெயரையும் எழுதி அப்பெயருக்கு எதிரே அவர் அடைய விரும்புவதையும் எழுதுங்கள் என்று சொன்னார். அம்மனிதரும் ஊருக்குள் சென்று ஒவ்வொருவரிடமும் கேட்டு ஒரு பட்டியலை தயார் செய்தார். இரவு அந்த மனிதர் புத்தரிடம் திரும்பி வந்து தனது பட்டியலைக் காட்டினார். புத்தர் அந்த மனிதரிடம், இவர்களில் எத்தனை பேர் விண்ணகம் அடைய விரும்புகின்றனர் என்று கேட்டார். பட்டியலைப் படித்துப் பார்த்த அந்த மனிதருக்கு ஒரே வியப்பு. விண்ணகம் அடைய விருப்பம் என்று ஒருவர்கூட சொல்லவில்லை. அப்போது புத்தர், ஒவ்வொரு மனிதரும் விண்ணகம் அடைய முடியும் என்றே நான் கூறினேன், ஆனால், ஒவ்வொரு மனிதரும் விண்ணகம் அடைய விரும்புகிறார்கள் என்று நான் சொல்லவில்லை என்றார்.    

உண்மைதான். யார் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதே முக்கியம். தன்னையே தெரியாதவர் எப்படி தன்னை முன்னேற்ற முடியும்?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.