2015-08-20 16:10:00

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மியான்மார் திருஅவை உதவி


ஆக.20,2015. மியான்மார் நாட்டில், சின் மற்றும் ராக்கினே பகுதிகளைப் பெருமளவில் சேதமாக்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலத்திருஅவை உதவிகள் செய்வதில் முன்னிலை வகிக்கிறது.

Aid to the Church in Need (ACN) என்ற பன்னாட்டு கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் உதவியுடன் தலத்திருஅவை, நிவாரணப் பணிகளை முழுவீச்சில் செய்து வருவதாக Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

மியான்மார் அரசு செல்ல முடியாத இடங்களில், தலத்திருஅவை இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, நிவாரணப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

சின் மற்றும் ராக்கினே பகுதிகளில் கோவில்களும் சேதமடைந்து உள்ளன என்றும், இருப்பினும், அங்குள்ள பங்கு கோவில் உறுப்பினர்கள், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

மியான்மார் வரலாற்றில் இதுவரைக் காணாத அளவு பெருகியுள்ள இந்த வெள்ளத்தில், இதுவரை 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்றும், 13 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.