2015-08-20 16:06:00

பாலஸ்தீன குழந்தைகளுக்கு பள்ளி ஆண்டு விரைவில் துவங்கும்


ஆக.20,2015. பாலஸ்தீனா நாட்டிலிருந்து புலம் பெயர்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு, பள்ளி ஆண்டு விரைவில் துவங்கும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நிதி பற்றாக்குறை, மற்றும் தொடரும் மோதல்கள் காரணமாக, காலதாமதங்கள் ஏற்பட்டாலும், மத்தியக் கிழக்குப் பகுதிகளில், 685 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன என்று, ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

குழந்தைகளின் அடிப்படை உரிமை கல்வி என்றும், அவ்வுரிமையை வழங்குவதில் தாமதம் செய்வது, அவ்வுரிமையைப் பறிப்பதற்குச் சமம் என்றும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

பலவழிகளிலும் நிரந்தரமற்றச் சூழலை எதிர்கொள்ளும் மத்தியக் கிழக்கு நாடுகளில், ஐ.நா.அவையின் பாலஸ்தீன துயர்துடைப்புப் பிரிவின் தொடர் முயற்சிகளால், குழந்தைகளுக்கு கல்வி ஆண்டு துவங்கவிருப்பது குறித்து, பான் கி மூன் அவர்கள், தன் மகிழ்வை வெளியிட்டார்.

ஐ.நா.வின் முயற்சியால், ஆகஸ்ட் 24ம் தேதி, பாலஸ்தீனாவிலும், செப்டம்பர் 1, ஜோர்டான் நாட்டிலும், 7ம் தேதி, லெபனான் நாட்டிலும், 13ம் தேதி சிரியாவிலும், பாலஸ்தீன குழந்தைகளுக்கு பள்ளிகள் துவங்கும் என்று, ஐ.நா. உயர் அதிகாரி, Pierre Krähenbühl அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.