2015-08-20 15:50:00

குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர் உலக நாளின் மையக்கருத்து


ஆக.20,2015. "குடியேற்றதாரரும் புலம்பெயர்ந்தோரும் நமக்கு சவால்களை முன்வைக்கின்றனர். கருணை நற்செய்தியின் பதிலிருப்பு" என்பது, குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்வு செய்துள்ள மையக்கருத்து என்று திருப்பீடம் இவ்வியாழனன்று அறிவித்துள்ளது.

1915ம் ஆண்டு முதல் கத்தோலிக்கத் திருஅவையில் கடைபிடிக்கப்படும் இந்த உலக நாள், 2016ம் ஆண்டு, சனவரி 17ம் தேதி, 102வது முறையாகக் கடைபிடிக்கப்படும்.

இந்தச் சிறப்பு நாளுக்கென்று திருத்தந்தை தேர்ந்துள்ள மையக் கருத்து, அவர் அறிவித்துள்ள கருணையின் ஜுபிலி ஆண்டின் எண்ணங்களையும் உள்ளடக்கியுள்ளதென்று, குடியேற்றதாரர் மற்றும் பயணிகள் மேய்ப்புப்பணி திருப்பீட அவை அறிவித்துள்ளது.

102வது குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென திருத்தந்தை தெரிவு செய்துள்ள கருத்தை மையப்படுத்தி, ஒவ்வொரு மறைமாவட்டமும் பல்வேறு  செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு திருப்பீட அவை பரிந்துரைத்துள்ளது.

இன்றைய உலகில், குடியேற்றதாரரும் புலம்பெயர்ந்தோரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மிகப்பெரும் அளவில் வளர்ந்து வருவதால், குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாள் ஒரு நாள் முயற்சியாக மட்டும் மாறிவிடாமல், ஆண்டு முழுவதும் தொடரும் பல்வேறு முயற்சிகளாக உருவாக வேண்டும் என்று குடியேற்றதாரர் மற்றும் பயணிகள் மேய்ப்புப்பணி திருப்பீட அவை அழைப்பு விடுத்துள்ளது.

102வது குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென திருத்தந்தை வழங்கும் செய்தி, விரைவில் வெளியாகும் என்றும் இத்திருப்பீட அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.