2015-08-19 16:11:00

லூர்து திருத்தலத்திற்கு உரோம் மறைமாவட்ட மக்கள் திருப்பயணம்


ஆக.19,2015. உரோமை மறைமாவட்டத்தில், திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும் கர்தினால் Agostino Vallini அவர்கள் தலைமையில், ஆகஸ்ட் 25ம் தேதி முதல், 29ம் தேதி முடிய, லூர்து நகர் மரியன்னை திருத்தலத்திற்கு உரோம் மறைமாவட்ட மக்கள் திருப்பயணம் மேற்கொள்கின்றனர்.

1957ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த ஐந்துநாள் திருப்பயண முயற்சிக்கு, "மறைபரப்புப் பணியின் மகிழ்ச்சி" என்பது, இவ்வாண்டு மையக் கருத்தாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

லூர்து நகர் அன்னையின் திருத்தலத்திற்குச் சென்று வரும் அனைவரும் வாழ்வில் மாற்றங்களை உணர்ந்து வருவதை வரலாறு சொல்கிறது என்று கூறிய திருப்பயண அமைப்பாளர், அருள்பணி Liberio Andreatta அவர்கள், இன்றைய காலக் கட்டத்தில் நாம் சந்திக்கும் சவால்களுக்கு அன்னையின் திருத்தலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

திருநற்கருணை பவனி, செபமாலை, திருப்பலி, ஒப்புரவு அருள் அடையாளம் என்ற பல பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இத்திருப்பயணத்தில், பல்கலைக் கழக மாணவர்கள், பெருமளவில் பங்கேற்கவிருப்பதாக அருள்பணி Andreatta அவர்கள், கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.