2015-08-19 15:03:00

மறைக்கல்வி உரை – குடும்ப வாழ்வில் பணிகளின் முக்கியத்துவம்


ஆக.,19,2015. குடும்பம் குறித்த நம் புதன் மறைக்கல்வித் தொடரில், இன்று வேலையின் முக்கியத்துவம் குறித்து நோக்குவோம் என தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். நாம் ஆற்றும் பணியானது, நம் கொண்டாட்டத் தருணங்களை முழுமை அடையச் செய்வதுடன், இறைவனின் படைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. நாம் ஆற்றும் பணியின் மூலம் நம் குடும்பத்தின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன, மற்றும் குழந்தைகளுக்கு ஒரு மாண்புடைய வாழ்வு வழங்கப்படுகிறது. இதன் வழியாக, பொதுநலனுக்கும் பங்காற்றப்படுகின்றது. குடும்ப வாழ்வுக்கும், சமூகத்திற்கும், தாங்கள் ஆற்றும் பணிகளின் வழியாக, பணிகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் மதிப்பீடுகள் குறித்து, தங்கள் குழந்தைகளுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டைக் கற்பிக்கின்றனர், பெற்றோர். இது குறித்து நாம் விவிலியத்திலும் காண்கிறோம். இயேசுவை ஒரு தச்சனின் மகனாகவும், ஏன், இயேசுவை ஒரு தச்சனாகவும் .(மத்.13,55, மாற்கு 6,3) காட்டுகிறது விவிலியம். பணியும், ஆன்மீக வாழ்வும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல, மாறாக, ஒன்றுக்கொன்று இணக்கமாகச் செல்பவை. ஏனெனில் பணி என்பது, இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதரின் மாண்பை வெளிப்படுத்துவதாகும். நாம் வேலையில் ஈடுபடும்போது, நிலத்தை உழுது அதன்மீதான அக்கறையை வெளிப்படுத்துவதன் மூலம் நாமும் படைப்புத் தொழிலில் பங்கேற்கிறோம். ஆனால், சில வேளைகளில், வேலையைக் குறைத்து, இலாபத்தில் அதிகக் கவனம் செலுத்தும்போதும், மனித குலத்தின் மீதும், உலகின் மீதும், நம் வேலையின் தீய பாதிப்புக்கள் குறித்து கவலைப்படாதபோதும், சுற்றுச் சூழலும் நம் வாழ்வும் துன்பங்களை அனுபவிக்கின்றன. குறிப்பாக, இத்தகையப் போக்குகள், ஏழைகளையும் குடும்பங்களையும் பெரிய அளவில் காயப்படுத்துகின்றன. படைப்பின் அடிப்படைகளை, அதன்  நோக்கங்களை  மனிதகுலத்தின் முன்னால் தெளிவாக எடுத்து வைக்கும் பொறுப்பையும் சவாலையும் கிறிஸ்தவக் குடும்பங்களுக்குக் கொடுத்துள்ளார், இறைவன். இந்த சவால் என்பது, ஆண் மற்றும் பெண்ணின் தனித்தன்மைகளையும், அவர்களுக்கிடையே பகிரப்படும் பிணைப்பையும்  உண்மையாகப் புரிந்து கொள்வதும்,  இவ்வுலகிற்கு புதிய படைப்பாம் குழந்தைகளைக் கொணர விடப்பட்டுள்ள அழைப்பை ஏற்பதும்,  இவ்வுலகை நம் பணிகள் வழியே மேலும் பலன் தரும் வளமுடையதாகவும் இன்முக வரவேற்பு நிறைந்ததாகவும் மாற்றுவதுமாகும். நாம் இன்று எதிர்நோக்கிவரும் பல்வேறு சவால்களின் மத்தியில், இறைவன் நமக்கு வழங்கியுள்ள இந்த அழைப்பை மகிழ்வுடனும் நம்பிக்கையுடனும் ஏற்க, இறைவன் நமக்கு உதவுவாராக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.