2015-08-19 15:35:00

Taizé குழு, தாய்லாந்து மன்னருக்கு திருத்தந்தையின் செய்திகள்


ஆக.19,2015. அமைதி, ஒப்புரவு ஆகிய விவிலிய விழுமியங்களுக்கு, அயராத ஒரு சான்றாக வாழ்ந்தவர், சகோதரர், ரோஜர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் வெளியிட்ட ஒரு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் Taizé என்ற குழுமம், சகோதரர் ரோஜர் அவர்கள் பிறப்பின் நூற்றாண்டைக் கொண்டாடிவரும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குழுமத்தின் தலைவர், சகோதரர் Alois அவர்களுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

சகோதரர் ரோஜர் அவர்கள் உருவாக்கிய Taizé குழுமம், 'ஒற்றுமையின் உவமை' என்று அழைக்கப்படும் தகுதி பெற்றது என்று திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு கிறிஸ்தவப் பாரம்பரியங்களில், ஒப்புரவு, ஒற்றுமை குறித்து கூறப்பட்டுள்ள பல ஆழமானக் கருவூலங்களை, Taizé குழுமத்தின் வழியாக, சகோதரர் ரோஜர் அவர்கள், இவ்வுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார் என்று, திருத்தந்தை, தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.

சகோதரர் ரோஜர் அவர்கள் உருவாக்கிய Taizé குழுமத்தின் 75வது ஆண்டு நிறைவும், சகோதரர் ரோஜர் அவர்கள் மறைவின் 10ம் ஆண்டு நிறைவும், அவரது பிறப்பின் நூற்றாண்டு நிறைவுடன் இணைந்து வருவதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 17, இத்திங்களன்று, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் Erawan கோவிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மரணமடைந்தோருக்கும், காயமுற்றோருக்கும், தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும், திருத்தந்தை தெரிவித்துள்ளதாக, கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், தாய்லாந்து மன்னர், Bhumibol Adulyadej அவர்களுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.