2015-08-19 16:01:00

FARC அமைப்பு திருத்தந்தையைச் சந்திக்க விருப்பம்


ஆக.19,2015. செப்டம்பர் 19ம் தேதி முதல், 22ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கியூபா நாட்டில் மேற்கொள்ளும் பயணத்தின் ஏற்பாடுகளைத் திட்டமிட, அந்நாட்டு அரசுத் தலைவர், Raúl Castro அவர்கள், ஹவானா பேராயர், கர்தினால் Jaime Ortega Alamino அவர்களை, இத்திங்களன்று சந்தித்துப் பேசினார் என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

இதற்கிடையே, கொலம்பியாவில் அரசுக்கு எதிராகப் போராடிவரும் ஆயுதம் தாங்கிய போராளிகள் அமைப்பான FARCன் பிரதிநிதிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் Zenit செய்தி  அறிவித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொலம்பிய அரசுக்கும், FARC குழுவிற்கும் இடையே நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய மோதல்களில், இதுவரை, 2,20,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 25,000த்திற்கும் அதிகமானோர் தலைமறைவாகியுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

2012ம் ஆண்டு முதல், அரசுக்கும் FARC அமைப்பிற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள், நாட்டுக்கு நல்ல விளைவுகளை உருவாக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதத் துவக்கத்தில் செய்தியொன்றை அனுப்பியிருந்தார்.

இந்தப் பேச்சு வார்த்தைகள், தகுந்த வகையில் நடைபெற, கியூபா ஆயர் பேரவை முயற்சிகள் எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.