2015-08-18 15:03:00

விவிலியத் தேடல் : இறுதித் தீர்ப்பு உவமை – பகுதி - 1


வத்திக்கான் வானொலி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நண்பர், அண்மையில், ஒரு மின்னஞ்சல் வழியே, செபங்களுக்காக விண்ணப்பித்திருந்தார். தனது உறவினர் ஒருவரும், அவரது துணைவியாரும் தங்கள் ஒரு வயது மகனை இழந்து, ஓராண்டு முடிந்துவிட்டதைக் குறித்து எழுதியிருந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் தங்கள் குழந்தையைப் பறிகொடுத்த அந்தப் பெற்றோர், கடந்த ஒராண்டளவாய் ஆறுதல் பெறமுடியாமல் தவிப்பதை, நமது நண்பர், அந்த மடலில் குறிப்பிட்டு, அவர்களுக்காக செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

எந்த ஒரு மரணச் செய்தியும் நமக்குள் ஒரு வேதனையை, வெற்றிடத்தை உருவாக்குவது இயல்புதானே! இந்தச் செய்தியும் எனக்குள் அவ்வகை உணர்வுகளை உருவாக்கின. அதுவும், இறந்தது ஒரு குழந்தை என்பதும், மருத்துவர்களின் தவறால் குழந்தை இறந்தது என்பதும், இந்த வேதனையை அதிகமாக்கின. தங்கள் அருமை மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு, எவ்வகையில் ஆறுதல் சொல்வது என்றறியாமல் தடுமாறினேன். அவ்வேளையில் என் மனதில் ஒரு கற்பனை காட்சி தோன்றியது.

மறைந்த அவர்களது ஒரு வயது மகன், இயேசுவின் மடியில் அமர்ந்து, தன் பெற்றோரைப் பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு கற்பனை காட்சி என் உள்ளத்தில் எழுந்தது. அக்காட்சியை, அவர்களுக்கு, மடலின் வழியே பகிர்ந்து கொண்டேன். எனக்கு ஓரளவு ஆறுதலைத் தந்த அந்தக் காட்சி, குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோரின் உள்ளத்திலும் தோன்றி, அவர்களுக்கும் ஆறுதல் தரும் என்ற நம்பிக்கையில், அந்த பதிலை அனுப்பினேன். நான் எழுதியிருந்த பதில், அவர்களுக்கு ஓரளவு உதவியாக இருந்ததென்று, நண்பர் என்னிடம் தொலைபேசி வழியே சொன்னபோது, இறைவனுக்கு நன்றி சொன்னேன். இந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு ஒரு முக்கிய காரணம், இன்று நாம் தேடலை துவக்கியுள்ள ‘இறுதித் தீர்ப்பு உவமை’. மத்தேயு நற்செய்தி, 25ம் பிரிவின் இறுதியில் நாம் காணும் இந்த உவமை, வாழ்வின் இன்றியமையாத உண்மைகளான மரணம், மறுவாழ்வு ஆகியவற்றைச் சிந்திக்க ஒரு வாய்ப்பளிக்கிறது.

மரணம், நாம் அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம். அந்த அனுபவத்திற்கு நாம் அனைவருமே ஒருநாள் உள்ளாகப் போகிறோம் என்பதையும் அறிவோம். இருந்தாலும், அந்த அனுபவம், நமக்குள் வேதனையையும், வெற்றிடத்தையும் உருவாக்குவது உண்மைதானே! நமக்கு மிக நெருக்கமான உறவுகள் பிரிந்ததால் உருவாகும்  வெற்றிடத்தை, வேதனையாலும், கசப்பாலும் நிரப்புவதற்குப் பதிலாக, ஆறுதல் தரும் எண்ணங்களால் அந்த வெற்றிடத்தை நிரப்புவது, நம் வாழ்வைத் தொடர்வதற்கு சக்தி தரும். அத்தகைய ஆறுதல் வழங்கும் ஓர் எண்ணம்... மறு உலக வாழ்வு என்ற எண்ணம். நம்மைவிட்டுப் பிறந்த உறவுகள், தொடர்ந்து வாழ்கின்றனர் என்ற உணர்வு, நாம் இவ்வுலகப் பயணத்தைத் தொடர்வதற்கு உதவியாக உள்ளது.

மரணத்தோடு நம் வாழ்வு முற்றிலும் முடிந்து விடுவதில்லை; இவ்வுலகைத் தாண்டி, மற்றொரு வாழ்வு உண்டு என்பதை, பல்வேறு மதங்கள் பல வழிகளில் கூறியுள்ளன. மறுவாழ்வு குறித்து விவிலியத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களில், 'இறுதித் தீர்ப்பு' என்பதும் ஒரு முக்கியமான பாடம். இறுதித் தீர்ப்பை, ஓர் உவமை வடிவில், நற்செய்தியாளர் மத்தேயு, 25ம் பிரிவில், 16 இறைச் சொற்றொடர்களில், வழங்கியுள்ளார்.

என் சிந்தனைகளுக்குத் தூண்டுதலாக நான் அடிக்கடி தேடிச்செல்லும் ஓர் எழுத்தாளர், Ronald Rolheiser என்ற அருள் பணியாளர். புகழ்பெற்ற இந்த இறையியல் அறிஞர், விபத்தில் இறந்த 18 வயது இளைஞர் ஒருவரின் அடக்கச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த அடக்கத் திருப்பலியில் கலந்துகொண்ட அருள்பணி Rolheiser அவர்கள், மரணத்தைப் பற்றி, குறிப்பாக, இளவயதில் ஒருவர் மரணம் அடைவது, நம்மில் உருவாக்கும் உணர்வுகள் பற்றி, தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.

“அடக்கச் சடங்குகளில் அதிகம் பேசாமலிருப்பதே மேல். அதிலும் குறிப்பாக, வாழ்வைத் துவங்கியுள்ள ஒருவரை, மரணம் பறித்துச் செல்லும்போது, அந்நேரத்தில், உயிர்ப்பு, மறுவாழ்வு என்று அதிகம் பேசுவது, பொருளற்றதுபோல் தோன்றும். 'நான் உங்களோடு இருக்கிறேன்; உங்களோடு சேர்ந்து நானும் துன்புறுகிறேன்' என்ற ஒரு செய்தி, அந்நேரத்திற்குப் போதுமானது. இருந்தாலும், அவ்வேளையில் சில வார்த்தைகள் தேவைப்படுகின்றன. நாம் அடக்கம் செய்யப்போகும் அவருடன் நமக்குள்ள உறவை நமக்குத் தெளிவுபடுத்தவும், நாம் நம்பும் இறைவனுடன் நமக்குள்ள உறவைத் தெளிவுபடுத்தவும், வார்த்தைகள் தேவைப்படுகின்றன” என்று அருள்பணி Rolheiser அவர்கள் கூறியுள்ளார்.

இளவயதில் இறந்த ஒருவரை அடக்கம் செய்யும்போது நமக்குள் உருவாகும் சில எண்ணங்களை அருள்பணி Rolheiser அவர்கள் அலசுகிறார்:

“அவ்வேளைகளில் ஒருவகை குற்ற உணர்வும், பயமும், நெருங்கிய உறவுகளைச் சூழ்கின்றன. இவ்வளவு இளவயதில் அவர் வாழ்விலிருந்து பறித்துக்கொள்ளப் பட்டபோது, நாம் தொடர்ந்து வாழ்கிறோமே என்ற ஒரு குறுகுறுப்பு; இறந்தவருக்கு நாம் இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டும், இன்னும் கூடுதல் நாட்கள் கிடைத்திருந்தால், இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாமே என்ற ஆதங்கம் ஆகியவை கலந்து, குற்ற உணர்வை உருவாக்குகின்றன. மறு உலகிற்குத் தேவையான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல், இளையவர் போய்விட்டாரே என்ற பய உணர்வும் இந்த அடக்கச் சடங்கில் மேலோங்குகிறது” என்று கூறும் அருள்பணி Rolheiser அவர்கள், நமது குற்ற உணர்வு, பயம் ஆகியவற்றை மேற்கொள்ளும் வழிகளை, ஓர் உருவகத்தின் வழியாக விளக்க முயல்கிறார்.

தன்னுடைய மகளோ, மகனோ, படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ, புதியதோர் ஊருக்கு அல்லது நாட்டிற்குச் செல்லும்போது, அவர்களைப் பற்றி பெற்றோர் பெருமளவு பயமும், கவலையும் அடைவது இயல்பு. அவ்வேளைகளில், தங்கள் மகனோ மகளோ செல்லும் இடத்தில், தங்களுக்குத் தெரிந்த ஓர் உறவு இருப்பதை பெற்றோர் உணர்ந்தால், அவர்களது பயம் பெருமளவு குறையும்.

இளவயதில் மரணமடையும் இளையோரை அடக்கம் செய்யும்போதும், அவர், ஏற்பாடுகள் ஏதுமின்றி, அடுத்த உலகிற்குச் சென்றுவிட்டாரே என்ற அங்கலாய்ப்பு உருவாகும்; நம்மிடமிருந்து விடைபெறும் இளையவர், இறைவனைச் சந்திக்கச் செல்கிறார் என்ற எண்ணம் அந்நேரம் தோன்றினால், மனதில் ஆறுதல் பிறக்கும். அடக்கம் செய்யப்படும் இளையவர், இனி பாதுகாப்பான ஓர் இடத்தில், சிறந்ததொரு கண்காணிப்பில் இருக்கப்போகிறார் என்ற எண்ணம், நமக்குள் உருவாகியிருக்கும் பயத்தை, குற்ற உணர்வை, வேதனையை, வெற்றிடத்தை, பெருமளவு குறைக்கும். அந்த பாதுகாப்பையும், கண்காணிப்பையும் இறைவன் தருவார் என்பதே, கிறிஸ்தவ மறையில் சொல்லப்படும் ஓர் அழகிய எண்ணம்.

சாவு, மரணம் என்று யாராவது பேச ஆரம்பித்தால், "வேறு ஏதாவது நல்லவற்றைப் பற்றி பேசுவோமே" என்பது தான் நமது முதல் எண்ணம், முதல் பதில். சாவு, மரணம் என்பவை ஏதோ நல்லவை இல்லாத, அமங்கலமான சொற்கள், எண்ணங்கள் என்பது நம் கணிப்பு. ஆனால், சாவு, மரணம் இவற்றையும் நல்லதொரு கோணத்திலிருந்து பார்த்தால், அந்தப் பார்வை நமது வாழ்வைக் குறித்து பல தெளிவுகளை உண்டாக்கும்.

நாமோ, அல்லது நமக்கு நெருங்கிய ஒருவரோ ஒர் இறுதி நிலைக்கு வந்துவிடும் நேரங்களில் தாம் நாம் பெரும்பாலும் மரணத்தைப் பற்றி நினைக்கிறோம். அந்த நேரங்களில் மனதில் பயம், கலக்கம் போன்ற உணர்வுகளே அதிகம் உண்டாகும். நல்ல உடல் நிலையுடன் இருக்கும்போது, எந்த வித படபடப்பும் இல்லாமல் மரணத்தைப் பற்றி ஏன் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை? மரணம் என்ற ஓர் எல்லைக்கு உட்பட்டதுதான் வாழ்க்கை என்பதை உணராமல், வாழ்வைப் பற்றிய ஒரு முழுமையான எண்ணத்தை எப்படி பெற முடியும்? இந்த எண்ணங்களைக் கூறுவது Studs Terkel என்ற அமெரிக்க எழுத்தாளர்.

Studs Terkel 2001ம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலின் தலைப்பு: “Will the Circle be Unbroken? Reflections on Death, Rebirth and Hunger for a Faith”. இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? - மரணம், மறுவாழ்வு, மறு ஜென்மம், விசுவாசம் பற்றிய சிந்தனைகள். 2001ம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டு. இந்த உலகம் அழியப் போகிறதென்று பலர் எதிர்பார்த்த ஓர் ஆண்டு. வேறு பலர் இந்த உலகம் புதியதொரு யுகத்தை ஆரம்பித்துள்ளதென்று கூறிவந்த ஆண்டு. அந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில்  நடந்த ஒரு நிகழ்வு , பலருக்கும், வாழ்வின் ஒரு முக்கியமான உண்மையைச் சிந்திக்க வாய்ப்பளித்தது. நியூயார்க்கில் இருந்த இரு வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்டு, ஏறக்குறைய 3000 பேர் கொல்லப்பட்டனர். இந்த அழிவு பட்டப் பகலில் நடந்ததால், பல வீடியோ காமிராக்களில் பதிவு செய்யப்பட்டு, உலகெங்கும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. எனவே, மிக ஆழமான தாக்கங்களை மக்கள் மனதில் உண்டாக்கிச் சென்றது. மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத முடிவான மரணத்தைப் பற்றி பல சிந்தனைகளை உருவாக்கிச் சென்றது. இப்படி எழுந்த பல சிந்தனைகள், புத்தக வடிவில் வெளிவந்தன. இப்படி வெளிவந்த புத்தகங்களில் ஒன்றுதான் Studs Terkel அவர்கள் எழுதிய இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? என்ற இந்தப் புத்தகம். 400 பக்கங்களுக்கு மேல் கொண்ட இப்புத்தகத்தில் 63 பேரின் எண்ணங்கள் பதியப்பட்டுள்ளன. மரணம், மறுவாழ்வு, மறுஜென்மம், விசுவாசம் என்ற பல எண்ணங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நூலின் ஒரு சில கருத்துக்களிலும், மறுவாழ்வை மையப்படுத்தி நற்செய்தியாளர் மத்தேயு கூறியுள்ள 'இறுதித் தீர்ப்பு உவமையிலும் நம் தேடல் அடுத்தவாரம் தொடரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.