2015-08-18 14:53:00

சுற்றுச்சூழல் நெருக்கடியைக் களைவதற்கு மதத்தினருக்கு அழைப்பு


ஆக.18,2015. சுற்றுச்சூழல் பாதிப்பு நெருக்கடியைக் களைவதற்கு அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் காலநிலை மாற்றம் குறித்து இஸ்லாமியர் நடத்திய கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பிய கர்தினால் டர்க்சன் அவர்கள், சுற்றுச்சூழல் நெருக்கடி, இன்றைய நவீன உலகு எதிர்நோக்கும் எல்லாப் பிரச்சனைகளிலும் மிகவும் கடுமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடியைக் களைவதற்கு பெரிய உந்து சக்தியாக இருப்பது, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், மற்ற மதத்தினரும் இறைவனில் கொண்டிருக்கும் நம்பிக்கை என்றும்  கூறியுள்ளார் கர்தினால் டர்க்சன்.

நாம் இறைவனில் கொண்டிருக்கும் விசுவாசம், நமக்கு அவர் கொடுத்துள்ள வியப்புக்குரிய கொடையாகிய படைப்பைப் பாதுகாப்பதற்கு நம்மை வற்புறுத்துகிறது என்றும் கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த நாம் அனைவரும் இந்நெருக்கடியை களைவதற்கு வழிகளை ஆராய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இஸ்தான்புல் நகரில் இச்செவ்வாயன்று நிறைவடைந்த இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், கர்தினால் டர்க்சன் அவர்களின் செய்தியை, அருள்பணி John T. Brinkman அவர்கள் வாசித்தார்.

மேலும், இக்கருத்தரங்கின் இறுதியில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் 160 கோடி முஸ்லிம்களும், காலநிலை மாற்றம் குறித்த தங்களின் சமயக் கடமைகளை நிறைவேற்றி, நடவடிக்கைகளை எடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.