2015-08-18 15:03:00

சிலுவைகள் அகற்றப்பட்டிருப்பது விசுவாசத்தை அவமதிப்பதாகும்


ஆக.18,2015. சீனாவின் Zhejiang மாநிலத்தில் சிலுவைகள் அகற்றப்பட்டிருப்பது, விசுவாசத்தை அவமதிப்பதாகவும், சமய சுதந்திரத்தை மீறுவதாகவும் உள்ளது என்று ஹாங்காங் கர்தினால் Joseph Zen Ze-kiun அவர்கள் கூறியுள்ளார்.

சீனாவில் சிலுவைகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வாரத்தில் செபங்களும் நோன்பும் கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வில் ஹாங்காங் புனித ஆன்ட்ரூ கத்தோலிக்க ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது இவ்வாறு கூறினார் ஓய்வுபெற்ற கர்தினால் Zen.

விசுவாசத்தின் அடையாளமாக இருக்கும் சிலுவையை அகற்றுவது, அரசியல் அமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் சமய உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று கூறினார் 83 வயது நிரம்பிய கர்தினால் Zen.

ஹாங்காங் மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த இத்திருப்பலியில், ஹாங்காங் துணை ஆயர் ஜோசப் ஹா சி ஷிங், இன்னும் ஐந்து வெளிநாட்டு மறைப்பணியாளர்கள் மற்றும் 750க்கு மேற்பட்ட விசுவாசிகளும் பங்கு கொண்டனர்.

Zhejiang மாநிலத்தில் வருகிற செப்டம்பர் முதல் தேதிக்குள் மேலும் 15 சமயக் கட்ட்டங்கள் இடிக்கப்படுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இதேபோல் ஹாங்காங்கிலும் சிலுவைகள் அகற்றப்படக்கூடும் என்ற அச்சம் அப்பகுதி கிறிஸ்தவர்களிடமும் ஏற்பட்டுள்ளது என செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.