2015-08-18 14:56:00

கடுகு சிறுத்தாலும் - உயிரின் ஊற்று உள்ளங்கையில் இருந்தும்...


1996ம் ஆண்டு, எவரெஸ்ட் மலைச் சிகரத்தைச் சென்றடைந்த ஒரு குழுவின் தலைவாரக இருந்தவர், Andy Harris என்ற இளைஞர். எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால், அங்கு செல்பவர்கள், ஆக்சிஜன் நிறைந்த சிறு உருளைகளை (canisters) எடுத்துச் செல்வர். ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து அங்கு தங்கினால், ஆக்சிஜன் குறைபாட்டினால் பிரச்சனைகள் வரும் என்பதால், சிகரத்தை அடைபவர்கள், அங்கிருந்து மலையடிவாரத்திற்குத் திரும்புவர்.

தாங்கள் மலைச் சிகரத்தை அடைந்த வெற்றியை அக்குழுவினர் கொண்டாடியபின், அனைவரும் மலையடிவாரம் நோக்கி புறப்பட்டனர். இளைஞர் Andy இன்னும் சிறிது நேரம் கூடுதலாக அச்சிகரத்தில் இருக்க விரும்புவதாகக் கூறினார். அவரை அங்கு விட்டுவிட்டு மற்றவர்கள் புறப்பட்டனர். இளைஞர் Andy அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து கூடுதல் நேரம் சிகரத்தில் தங்கியதால், ஆக்சிஜன் குறைவை உணர ஆரம்பித்தார்.

தான் வைத்திருந்த ஆக்சிஜன் உருளைகளை அவர் சோதித்தபோது, அவை காலியாக இருந்ததை உணர்ந்தார் Andy. மலையடிவாரம் நோக்கிச் சென்ற குழுவினருடன் ரேடியோ தொடர்பு கொண்ட அவர்,  தனக்கு ஆக்சிஜன் அவசரமாகத் தேவை என்ற செய்தியைப் பகிர்ந்தார்.  

அதைக் கேட்ட குழுவினரில் சிலர் மீண்டும் சிகரம் நோக்கி விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றபோது, இளைஞர் Andy, ஒரு ஆக்சிஜன் உருளையை இறுகப் பற்றியவாறு, இறந்திருப்பதைக் கண்டனர். அவர்கள் அந்த உருளையை ஆய்வு செய்தபோது, அதில் ஆக்சிஜன் முழுமையாக இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

நடந்தது என்ன? ஆக்சிஜன் குறைவானச் சூழலில், இளைஞர் Andy கூடுதல் நேரம் தங்கியதால், அவர் உடலுக்கு, குறிப்பாக, மூளைப் பகுதிக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் செல்லவில்லை. எனவே, அவர் மயக்க நிலையை அடைந்தார். அந்நிலையில், தன்னிடம் இருந்த ஆக்சிஜன் உருளையில் போதுமான அளவு ஆக்சிஜன் இருந்ததைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு அவரது மூளை வேலை செய்யவில்லை. எனவே, தன்னிடம் ஆக்சிஜன் முற்றிலும் இல்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார். அந்த அச்சம், அவரது இதயத் துடிப்பை நிறுத்திவிட்டதால், மயங்கி விழுந்து இறந்தார்.

உயிர் காக்கும் ஊற்றான ஆக்சிஜன், உள்ளங்கையில் இருந்தும், அதைப் பயன்படுத்தமுடியாமல், மரணத்தைச் சந்தித்தார், இளைஞர் Andy Harris.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.