2015-08-17 15:32:00

வாரம் ஓர் அலசல் – யார் உண்மையான மனநோயாளி?


ஆக.17,2015. தனி மனித ஒழுக்கம், சமூகப் பொறுப்பு இவையிரண்டும் இன்றைய நம் சமுதாயத்திற்கு மிகவும் தேவை. இதை யாரும் மறுப்பதற்கில்லை. அரசியல், தொழில்துறை, கலைத்துறை, கல்வித்துறை என எல்லா மட்டங்களிலும் இவையிரண்டும் அவசியம். இலங்கையில் இத்திங்கள் காலை ஏழு மணிக்குத் தொடங்கிய பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு வன்முறை ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்தது என்று ஊடகங்கள் கூறியுள்ளன. இத்தேர்தலில் 196 நாடாளுமன்றத் தொகுதிக்கு 6 ஆயிரத்து 151 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தல் பிரச்சார நாள்கள் பற்றிக் கூறிய ஓர் அரசு-சாரா தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் நடந்ததாகக் கூறியுள்ளது. ஆயிரத்து நூறுக்கும் அதிகமான தேர்தல்கால நிகழ்வுகள் பதிவாகியுள்ள போதிலும், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இம்முறை வன்முறைகள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளது. இது ஒரு நல்ல செய்தி. அதேநேரம், இந்திய சுதந்திர தின நாளில், திருப்பூர் மாவட்டம், ஆலங்காடு பகுதியிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில், 15, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் மது அருந்தி, போதை தலைக்கேற, தரையில் புரண்டு கொண்டிருந்தனர் என்ற செய்தி, நமது சமூகப் பொறுப்புணர்வு பற்றிய கேள்விகளை எழுப்புகின்றது. 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்கக்கூடாது என்ற விதியை மீறி இச்சிறுவர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்நிலைக்கு உள்ளாக காரணம் யார்? இந்நாள்களில் மது ஒழிப்பு விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அடுத்த கட்சியைச் சாடுவதைப் பார்க்கின்றோம். ஆனால் நல்லது நடக்கும்போது அதில் பங்கு இல்லாதவர்கூட அதற்கு உரிமை கொண்டாடும் நிலையையும் பார்க்கிறோம். நம்மில் தனி மனித ஒழுக்கம், சமூகப் பொறுப்பு இவை எந்நிலையில் உள்ளன? 

தனி மனித ஒழுக்கம், சமூகப் பொறுப்பு இவையிரண்டையும், திண்டுக்கல் அருகேயுள்ள வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் ஒரு மனநோயாளி பொது மக்களுக்குக் கற்றுத் தருகிறார் என்ற ஒரு செய்தியை கடந்த வெள்ளியன்று தி இந்து நாளிதழில் வாசித்தோம். வத்தலக்குண்டு பேருந்து நிலையம் கடந்த 2 மாதங்களாக குப்பைகள் இன்றி சுத்தமாகக் காணப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு மனநோயாளி இருக்கிறார். காலை முதல் இரவு வரை பேரூராட்சி குப்பை வண்டியுடன் பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றித்திரியும் இந்த மனநோயாளி, பயணிகள் வீசும் குப்பைகளை ஓடிச்சென்று எடுத்து குப்பைத் தொட்டியில் கொண்டு போடுகிறார். அவரைப் பார்த்து பயணிகளும் குப்பையை கீழே போடத் தயங்குவதால் வத்தலக்குண்டு பேருந்து நிலையம் இப்போது சுத்தமாக காணப்படுகிறது என்று அச்செய்தியில் வாசித்தோம். பேருந்து நிலைய கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரர் பிச்சை அவர்கள் இது குறித்து இவ்வாறு விளக்கியிருக்கிறார்....

‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்காக ஒருமுறை பேருந்து நிலையத்தில் சிலர் ஒருநாள் முழுவதும் இருந்து குப்பைகளை ஓடி ஓடி எடுத்தனர். அவர்களைப் பார்த்த, அந்தப் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் இந்த மனநோயாளி, பேருந்து நிலையத்தில் ஒரு குப்பையையும் விடுவதில்லை. பொதுவாக, வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் குவியும் குப்பைகளை வத்தலக்குண்டு பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் தினமும் காலையில் மட்டும் அகற்றுவர். மற்ற நேரங்களில் குப்பைகள் குவிந்து காணப்படும். ஆனால், கடந்த 2 மாதங்களாக இந்தப் பேருந்து நிலையம் குப்பை இன்றி சுத்தமாக காணப்படுகிறது. நாற்பது வயது நிரம்பிய ரெங்கராஜன் என்ற இந்த மன நோயாளி கொடைக்கானலைச் சேர்ந்தவர். இவர் கொடைக்கானலில் ஒரு கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது தம்பி இவரை அழைத்துச் செல்ல காரில் வந்தார். அவருடன் செல்ல இவர் மறுத்துவிட்டார். இவரது தம்பியிடம் விசாரித்தபோது, ஒருநாள் ரெங்கராஜன் அவர்கள், அவரது தந்தையை அடித்துவிட்டாராம். மகன் அடித்து விட்டானே என்ற கவலையில் அவரது தந்தை இறந்து விட்டாராம். அவரது இறப்புக்கு, தான் காரணமாகிவிட்டோமே என்ற கவலையில் இவர் மனநோயாளியாகிவிட்டார். அங்கிருந்து எப்படியோ நடந்து 2 மாதங்களுக்கு முன் இங்கு வந்தார். டீக்கடை, ஹோட்டலில் யாரிடமும் சென்று பிச்சை கேட்கமாட்டார். நாங்கள், கடைக்காரர்கள், பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் அவருக்கு உணவு வாங்கிக் கொடுப்போம். இன்று அவரால் எங்கள் ஊர் பேருந்து நிலையம் சுத்தமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எந்தப் பொதுநல அக்கறையுமின்றி, மக்கள் கண்ட இடங்களில் போடும் குப்பைகளை மனநலம் பாதித்த ஒருவர் எடுத்து அகற்றுவதைப் பார்த்து, தற்போது பேருந்து நிலையக் கடைக்காரர்கள் மற்றும் பயணிகள், குப்பையைத் திறந்த வெளியில் வீசத் தயங்குகின்றனர். வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளும், அப்பகுதி மக்களும் ஒரு மன நோயாளியால் மனமாற்றம் அடைந்திருப்பது, பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைக்கிறது

இந்தச் செய்தியை வாசித்த வாசகர்களில் சிலர் பதிவு செய்துள்ள சிந்தனைகளும் அருமை. இந்த நிகழ்வில் உண்மையான மன நோயாளி யார்? அன்புள்ளங்களே, இந்தக் கேள்வி நம் எல்லாருக்கும்தான். ரெங்கராஜன் என்ற இந்த மன நோயாளி, தெளிவான நிலையில், தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமும், சமூகப் பொறுப்பும் நிறைந்த ஒருவராகவே தென்படுகிறார். பசி என்றால் என்ன என்பதை அறியாமல் வாழ்ந்த இந்தக் கோடீஸ்வரர், யாரிடமும் பசிக்காகக் கையேந்துவதில்லை. மனநலத்தோடு வாழ்பவர்களிடம் இல்லாத பொதுநல அக்கறை, சமூகப் பொறுப்பு, மனநலம் பாதிக்கப்பட்ட இந்த மனிதரிடம் இருக்கிறது. பொது இடத்தைச் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற பொதுநல அக்கறையும் இவரிடம் இருக்கின்றது.

ரெங்கராஜன் அவர்களை, மனநோயாளி, பைத்தியக்காரர் என்று புனைப்பெயரிட்டு அழைப்பதைவிட, ஒரு மருத்துவர் என்று அழைப்பதுதானே சரியாக இருக்கும்! அதாவது, சமூகப் பொறுப்பின்றி, கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டி, குப்பைகளை வீசும் மனிதர்களின் மனங்களைக் குணப்படுத்திய, குணப்படுத்தி வரும் ஒரு மனநல மருத்துவர் என்று அழைப்பதுதானே பொருத்தமாக இருக்கும்! மருந்துகளால், மேடைப் பேச்சுகளால், ஆசிரம அறிவுரைகளால்  அல்ல, ஆனால் வார்த்தைகளற்ற செயலால் பிறரைத் திருத்தும் இவரை மருத்துவர் என்றுதானே அழைக்க வேண்டும்! மக்களின் சமூகப் பொறுப்பற்ற என்ற நோயைக் குணமாக்கிய மருத்துவர் இவர். மனநலத்தோடு வாழ்பவர் போடும் குப்பைகளை அவர்கள் கண்முன்னே அக்குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு அவர்களை வெட்கமடையச் செய்யும் சிறந்த மனநல மருத்துவர் இந்த மனநோயாளி!. இப்படி எல்லா நகரங்களின் பேருந்து நிலையங்கள், இன்னும் மற்ற பொது இடங்களில் கூச்சமின்றி குப்பை கொட்டுபவர்களைத் திருத்துவதற்கு மனநோயாளி மருத்துவர்கள் தேவைப்படுகிறார்களோ! வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலுள்ள சமூகத்தொண்டு மனநோயாளி விரைவில் குணமடைந்து இவரின் குடும்பத்தோடு சேர்ந்து வாழ வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இஞ்ஞாயிறன்று பிபிசி இணையதள ஊடகத்தில், “இயந்திரங்களுடன் 21 மணி நேரம் எண்ணப்பட்ட பெருந்தொகை ஊழல் பணம்”என்ற தலைப்பில், ஒரு செய்தி பிரசுரமாகியிருந்தது

இந்தியாவின் கொல்கத்தா நகரில் கையூட்டுப் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை 3 இயந்திரங்களுடன் எண்ணி முடிக்க 21 மணிநேரம் எடுத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கட்டடங்கள் கட்டப்படுவதற்கு அனுமதி அளிக்கும் பொறுப்பில் இருந்த உள்ளூர் நகராட்சி அதிகாரி ஒருவரிடமிருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் கைப்பற்றப்பட்டுள்ள இந்தப் பணத்தின் மதிப்பு 32 இலட்சம் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பணம் மட்டுமன்றி, அந்த அதிகாரியின் வீட்டிலிருந்து தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒரே தேடுதல் வேட்டையில் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள ஊழல் பணத்தில் இதுவே மிகப் பெரிய தொகை எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரி தனியாக செயல்பட்டிருக்க முடியாது எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

அன்புள்ளங்களே, இப்படிப்பட்ட செய்திகளை வாசிக்கும்போது உண்மையிலேயே மனநோயாளி யார்? என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் எழுகின்றது. நாட்டையும் நகரையும் நிறுவனங்களையும் காக்கும் பொறுப்பிலுள்ளவர்கள் பணம், பதவி என்று பைத்தியக்காரத்தனமாகச் செயல்படும்போது இவர்களை மனநலம் உள்ளவர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? தனிமனித ஒழுக்கமே, இன்றைய சமுதாயத்தின் அடிப்படை தேவை. ஒவ்வொரு மனிதரும் தன்னை திருத்திக் கொள்வதே சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்'' என, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள், இந்திய சுதந்திர தினத்தன்று திருப்பூர் டவுன்ஹாலில் இடம்பெற்ற 'மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அறிவுறுத்தினார். வத்தலக்குண்டு மனநோயாளி ரங்கராஜன் அவர்கள் போன்று, எத்தனையோ மன நோயாளிகளும், ஓரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட மனிதர் பலரும் தங்களின் சிறு சிறு செயல்களால் நல்ல நல்ல சமூகநலப் பாடங்களைச் சொல்லித் தருகின்றனர். இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்வோம். நம்மிலுள்ள தனி மனித ஒழுக்கத்தையும், சமூகப் பொறுப்பையும் மேலும் வளர்த்துக் கொள்வோம். உண்மையான மனநோயாளிகளை இனம் காண்போம்.   ஒழுக்கத்தோடு வாழ்பவருக்குப் பெயர்தான் மனிதன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.