2015-08-17 15:52:00

இறைவனை உண்டு அவரில் வாழும்போது நம் வாழ்வு மாற்றம்பெறுகிறது


ஆக.17,2015. திருநற்கருணை வழியாக நாம் இறைவனை உண்டு அவரில் வாழும்போது நம் வாழ்வு மாற்றம்பெற்று, இறைவனுக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கும் ஏற்ற கொடையாக அது மாறுகின்றது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவே வாழ்வு தரும் அப்பம் என்பதை எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பசித்திருந்த மக்கள் கூட்டத்திற்கு இயேசு அப்பத்தை பலுகச்செய்து வழங்கியபோதே, தன் வருங்கால தியாகப் பலியையும், அப்பமாகப் பகிரப்பட உள்ளதையும் அடையாளமாகக் காட்டிவிட்டார் என்று கூறினார்.

இயேசுவின் சதையை உண்டு இரத்தத்தைக் குடிப்பது குறித்த விளக்கத்தையும் வழங்கிய திருத்தந்தை, பிறருக்கென வழங்கப்படும் அப்பமாக தன்னை அடையாளம் காட்டிய இயேசு, இறுதி இரவு உணவின்போது, அதனை உண்மையாக்கியதோடு, தன் சதையை உண்டு இரத்தத்தைக் குடிப்பவர் தன்னில் வாழ்வர் எனவும் தெரிவித்தார் என மேலும் உரைத்தார்.

திருநற்கருணை என்பது ஒரு தனிப்பட்ட செபமோ, அழகான ஆன்மீக அனுபவமோ அல்ல, மாறாக, இயேசுவின் மரணத்தையும் உயிர்ப்பையும் மீண்டும் நம்முன் கொணரும் ஒரு நினைவுச் சின்னம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர் தரும் உணவாம் இயேசுவை உண்டு வாழ்வது என்பது, இயேசுவின் இதயத்திற்கு இணக்கமாக வாழ்ந்து, அவர் எண்ணத்தின் வழியில் நடந்து, தன்னலமற்ற வாழ்வில் நுழைந்து, அமைதி, மன்னிப்பு, ஒப்புரவு மற்றும் ஒருமைப்பாட்டின் மக்களாக மாறுவது என மேலும் எடுத்துரைத்தார் அவர்.

'இந்த அப்பத்தை உண்போர் என்றும் வாழ்வர்'  என இயேசு கூறியுள்ளது குறித்தும் விளக்கமளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகில் நாம் இயேசுவுடன் இணைந்து வாழும்போது மட்டுமே, மரணத்திலிருந்து வாழ்வுக்கு கடந்துச் செல்கிறோம் என்பதை இயேசுவின் வார்த்தைகள் குறித்து நிற்கின்றன என்று கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.