2015-08-15 15:32:00

இரு கொரிய நாடுகளின் ஒப்புரவிற்குச் செபிக்குமாறு வேண்டுகோள்


ஆக.15,2015. ஒரே மொழி பேசும் ஒரு சமுதாயத்தில், ஒருவர் ஒருவருக்கு எதிராக எழுபது ஆண்டுகளாக பிரிந்து வாழ்வது வேதனை நிறைந்த எதார்த்தம் என்று கூறியுள்ளார் தென் கொரியத் திருஅவைத் தலைவர்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது மற்றும் கொரியத் தீபகற்பம் இரு நாடுகளாகப் பிரிந்ததன் எழுபதாம் ஆண்டு நிறைவையொட்டி செய்தி வெளியிட்ட செயோல் பேராயர் கர்தினால் Yeom Soo-jung  அவர்கள், வட மற்றும் தென் கொரிய நாடுகள் ஒன்றிணைவதற்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார்.

வட மற்றும் தென் கொரிய நாடுகளின் ஒப்புரவுக்கு, இவ்விரு அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ள கர்தினால் Yeom அவர்கள்,     ஜப்பானின் காலனி ஆதிக்கத்திலிருந்து கொரியா விடுதலையடைந்தது, அன்னை மரியாவின் கொடை என்றும் கூறினார்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததையொட்டி, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி  ஜப்பானிடமிருந்து கொரியா விடுதலை பெற்றது என்பதைக் குறிப்பிட்டுள்ள கர்தினால் Yeom அவர்கள், ஆகஸ்ட் 15, அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழா என்பதால், இவ்விடுதலையை மரியாவின் கொடையாக நோக்கி அந்நாளில் நன்றித் திருப்பலி  நிறைவேற்றுகிறோம் என்றும் கூறினார்.

வட மற்றும் தென் கொரிய நாடுகள், தங்களுக்கிடையே இருக்கும் நம்பிக்கையின்மை, காழ்ப்புணர்வு, அச்சுறுத்தல்கள், திறந்தமனமற்ற கொள்கைகள் ஆகியவற்றை அகற்றி ஒப்புரவுப் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்திள்ளார் கர்தினால் Yeom.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.