2015-08-15 15:21:00

அமைதிக்குத் தீர்வு காண்பதற்கு துணிச்சல்,படைப்பாற்றல் அவசியம்


ஆக.15,2015. "மிகவும் தாழ்நிலையில் உள்ளவர்கள் வழியாக இறைவன் அரும்பெரும் செயல்களை ஆற்றுகிறார் என்று மரியாளின் வாழ்வு காட்டுகின்றது" என்ற வார்த்தைகள், அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழாவான இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

மேலும், கொலம்பியாவில் நடைபெற்றுவரும் அமைதிக் கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தீர்வு காண்பதில் துணிச்சலும், படைப்பாற்றலும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

“இக்கால நீதி, அமைதி மற்றும் போருக்குப் பின்னான காலம்” என்ற தலைப்பில் கொலம்பியாவின் கார்த்தஜேனாவில் நடைபெற்றுவரும் 18வது கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இன்று உலகம் இருக்கும் நிலையில், இக்கருத்தரங்கு கொலம்பியாவின் வருங்காலத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும், இக்கருத்தரங்கின் பிரதிநிதிகள் அமைதிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபத்தால் ஆதரவு அளிப்பதாகவும் அச்செய்தி கூறுகிறது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கும், FARC ஆயுதம் ஏந்திய புரட்சிக் குழுவுக்கும் இடையே ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையில் 2 இலட்சத்து இருபதாயிரம் பேர் இறந்துள்ளனர். 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர் மற்றும் முப்பதாயிரம் பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்விரு தரப்புக்கும் இடையே 2012ம் ஆண்டில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. தற்போது கியூபாவின் ஹவானாவில் இடம்பெற்று வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.