2015-08-14 15:26:00

திருத்தந்தையின் செய்தி தென் கொரியரின் வாழ்வை மாற்றியுள்ளது


ஆக.14,2015. ஓராண்டுக்கு முன்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவில் விட்டுச் சென்ற செய்தி, வாழ்வைச் சிறப்பாக அமைப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுவதாக பலர் உணருகின்றனர் என்று தென் கொரிய ஆயர் ஒருவர் கூறினார்.

2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13 முதல் 18 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய, தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுத் தலைவர் ஆயர் Lazzaro You Heung-sik அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட ஐந்து நாள் திருத்தூதுப் பயணத்தில் 124 மறைசாட்சிகளை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தினார் மற்றும் ஆசிய இளையோர் தினத்தில் கலந்துகொண்டார்.

தென் கொரியாவில் 2010ம் ஆண்டுக்குப் பின்னர் திருமுழுக்குகள் கிடப்பு நிலையில் இருந்தன, ஆனால் கடந்த ஆண்டில் திருமுழுக்குகள் 5 விழுக்காடு அதிகரித்திருப்பது நல்ல அடையாளமாக உள்ளது என்று ஆயர் Heung-sik அவர்கள் கூறினார்.

திருத்தந்தைக்கும், இளையோருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு மிக முக்கியமானது, இளையோர்க்கான மறைப்பணிக்கு தனது மறைமாவட்டம் முக்கியத்துவம் கொடுக்கின்றது, இதனாலேயே, 2019ம் ஆண்டிலும் இளையோர் தினத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார் ஆயர் Heung-sik.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.