2015-08-14 15:45:00

இலங்கையில் தமிழர்கள் மீதான வன்கொடுமை தொடர்கிறது


ஆக.14,2015. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீதான வன்கொடுமை இன்றும் தொடர்வதாக, புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

வன்கொடுமைகளில் இருந்து மீண்டு பிரிட்டனில் அடைக்கலம் தேடும் நபர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட, சித்ரவதையிலிருந்து விடுதலை(Freedom from Torture) என்ற மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

களங்கமடைந்த அமைதி ('Tainted Peace') என்ற பெயரில் இவ்வமைப்பு தயாரித்துள்ள புதிய அறிக்கையில், கடைசியாக இலங்கையில் வன்கொடுமைகளில் இருந்து மீண்ட 148 பேரில் பலரும், சகிக்க முடியாத துன்பங்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் 100 விழுக்காட்டினர் கடுமையான அடி, உதை தாக்குதலுக்கு உள்ளாகினர், 78 விழுக்காட்டினர் தீக்காயங்களுக்குள்ளாகினர், 71 விழுக்காட்டினர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர், 38 விழுக்காட்டினர் மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர், 70 விழுக்காட்டினர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 17ம் தேதி தேர்தலைச் சந்திக்கவிருக்கும் இலங்கை அரசு, அவசரப் பணியாக எடுத்துக் கொள்ள வேண்டியது, "இராணுவத்தினர் மற்றும் காவல்துறையால் நடத்தப்படும் வன்கொடுமைகளுக்குத் தீர்வு காண்பதே ஆகும்" எனவும் இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிந்து 6 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இலங்கையில் அமையும் புதிய அரசு, இராணுவம், காவல்துறை, உளவுத்துறை போன்றவை காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தும் வன்கொடுமைகளை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

ஆதாரம் : தி இந்து /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.