2015-08-14 15:20:00

அணு ஆயுதங்களற்ற உலகு உருவாக்கப்பட புனே ஆயர் அழைப்பு


ஆக.14,2015. மகாத்மா காந்தியின் தாயகமான இந்தியாவில் பிரச்சனைகள் வன்முறையற்ற வழிகளில் தீர்க்கப்படுமாறு புனே ஆயர் தாமஸ் தாப்ரே அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இவ்வாறு அழைப்பு விடுத்த ஆயர் தாப்ரே அவர்கள், இந்தியர்கள் அமைதி மற்றும் வன்முறையற்ற வழிகளுக்காக உழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் அந்நாட்டில் இராணுவ பலத்தை மீண்டும் புதுப்பிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைப் பாராட்டிப் பேசிய ஆயர் தாப்ரே அவர்கள், அணு ஆயுதங்களற்ற உலகு உருவாக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

கடந்த பல ஆண்டுகளாக உலகத் தலைவர்கள் அணு ஆயுதங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர், இந்த ஆயுதங்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் தேசிய பாதுகாப்பை முன்வைக்கின்றனர், ஆனால் இது அணு ஆயுதங்கள் பரவுவதற்கே இட்டுச்சென்றுள்ளது என்றும் கூறினார் ஆயர் தாப்ரே.

இன்று உலகில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன என்றும், அணுப்போரில் எந்த ஒரு நாடும் வெற்றிபெற்றதாக இருக்காது என்றும் உரைத்த புனே ஆயர் தாப்ரே அவர்கள், ஹிரோசிமா, நாகசாகி அனுபவங்கள் அணு ஆயுதங்களற்ற உலகுக்கு அழைப்பு விடுக்கின்றன என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.