2015-08-13 16:13:00

திருத்தந்தையின் கியூபா பயண இலச்சினை


ஆக.13,2015 அடுத்த மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கியூபா நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூது பயணத்தையொட்டி, கியூபா அரசு, இப்புதனன்று துவக்கியுள்ள இணையதளத்தில், திருத்தந்தையின் பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள ஓர் இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு கரம், ஒரு சிலுவை, மற்றும் கியூபா நாட்டுக் கொடியில் காணப்படும் ஒரு வெள்ளை விண்மீன் ஆகியவை இந்த இலச்சனையில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து ஓர் இதயத்தின் வடிவத்தை நினைவுறுத்துகின்றன.

சிலுவையைத் தாங்கியிருக்கும் கரம், கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை என்றும், இதயத்தின் வடிவம் இரக்கத்தைக் காட்டுகிறது என்றும், இந்த இணையதளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், கியூபா நாட்டிற்கு அவர் இரக்கத்தையும், நம்பிக்கையையும் கொணரும் என்ற கருத்தில், 'இரக்கத்தின் தூதர்' என்ற அடைமொழியுடன் இப்பயணம் அழைக்கப்படுகிறது.

செப்டம்பர் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய கியூபா நாட்டில் திருத்தூது பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு மேலும் ஒரு வாரப் பயணத்தை மேற்கொள்கிறார்.

ஆதாரம் : ZENIT /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.