2015-08-13 14:56:00

கடுகு சிறுத்தாலும்–உழைப்பால் ஈட்டிய பணத்தால் வரும் மகிழ்ச்சி


அந்த மனிதர் வீட்டில் நிறைய நேரம் எழுதுவார், எழுதும் நேரம்போக மற்ற நேரங்களில் தனது சொந்த வயல்களில் வேலை செய்வார். வேலை முடிந்ததும் அருகில் இருக்கும் இரயில் நிலையம் சென்று சிறிது நேரம் காலாற நடப்பார். இதுதான் அவருடைய அன்றாட நாள்காட்டி. இப்படி ஒருநாள் அவர் இரயில் நிலையத்தில் காலாற நடந்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் இரயில் நிலைய நடைமேடையில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் இவரை கைதட்டிக் கூப்பிட்டார். அம்மனிதரும் சென்றார். ஐயா, நானும் என் கணவரும் வந்தோம். அவர் அந்த உணவு விடுதிக்குப் போயிருக்கிறார். அங்கே நிற்கிற இரயில் புறப்பட்டுவிடும் போல் இருக்கிறது. நீங்கள் ஓடிப்போய் அவரை அழைத்து வருவீர்களா, அதற்குரிய கூலியையும் தந்து விடுகிறேன் என்று கணவரின் அடையாளங்களையும் விளக்கினார் அப்பெண். அம்மனிதரும் ஓடிப்போய், அப்பெண்ணின் கணவரை அழைத்து வந்தார். உடனே அந்தப் பெண் கூலியைக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு சென்ற அம்மனிதர் வழியில் அவரின் நண்பர் ஒருவரைப் பார்த்தார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட அந்தப் பெண், தன்னிடம் கூலி வாங்கியவர் பேரறிஞர் லியோ டால்ஸ்டாய் என்று தெரிந்து கொண்டார். உடனே அந்தப் பெண் ஓடிப்போய், ஐயா, உங்களுக்கா நான் கூலி கொடுத்தேன், நான் பெரிய தவறிழைத்துவிட்டேன் என்று வருத்தப்பட்டார். பரவாயில்லை, ஆனால் நீங்கள் கொடுத்த பணத்தை நான் திருப்பித் தரமாட்டேன். ஏன் தெரியுமா, இது நான் உழைத்துப் பெற்ற தொகை என்றார் இரஷ்யாவின் மிகப்பெரிய ஞானி, சோவியத்தின் ஈடு இணையில்லா இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.