2015-08-12 16:09:00

பிரேசில் ஆயர் பேரவை கொண்டாடும் தேசிய குடும்ப வாரம்


ஆக.12,2015 ஆகஸ்ட் 10, இத்திங்கள் முதல், 15, வருகிற சனிக்கிழமை முடிய, பிரேசில் நாட்டில், தேசிய குடும்ப வாரத்தை, பிரேசில் ஆயர் பேரவை கொண்டாடி வருகிறது.

1992ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்த முயற்சிக்கு, "அன்பே நமது மறைபரப்புப் பணி: குடும்பம் முழுமையான உயிர்த்துடிப்புடன் வாழ" என்பது, இவ்வாண்டு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள மையக் கருத்தாக அமைந்துள்ளது.

அடுத்த மாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்பியா நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ளும் குடும்பங்களின் உலக மாநாடு தேர்ந்தெடுத்துள்ள மையக் கருத்தும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதம், இளையோர் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானித்து, முடிவுகள் எடுக்கும் நேரம் என்பதால், அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதை, தேசிய குடும்ப வாரத்தின் வழியாக வலியுறுத்த விழைகிறோம் என்று பிரேசில் ஆயர் பேரவையின், குடும்ப நலப் பணிக்குழுவின் தலைவரான, ஆயர் João Bosco Barbosa de Sousa அவர்கள Fides செய்திக்கு அளித்த குறிப்பொன்றில் கூறியுள்ளார்.

ஆதாரம்: Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.