2015-08-12 16:27:00

ஆஸ்திரேலியாவின் புவி வெப்ப வாயுக் குறைப்பு இலக்கு போதாது


ஆக.12,2015 புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை குறைக்க, ஆஸ்திரேலியப் பிரதமர் நிர்ணயித்திருக்கும் இலக்கு, போதுமானதல்ல என அந்நாட்டு அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பசுமை இல்ல தாக்கத்தை உருவாக்கும் வாயுக்களை குறைக்க கூடுதல் இலக்கு நிர்ணயித்தால், பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற வாதத்தை அறிவியலாளர்கள் ஏற்கவில்லை.

எந்த அளவுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டுமோ, அதில் பாதியையே இலக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் Tony Abbott அவர்கள் அறிவித்திருப்பதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். 

ஆஸ்திரேலியா, 2030ஆம் ஆண்டுக்குள், 26 விழுக்காடு அளவுக்கு தனது புவி வெப்ப வாயுக்களை குறைக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக Tony Abbott அவர்கள் கூறியிருந்தார்.

இதற்கு மேலும் குறைத்தால், அது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற அரசின் வாதத்தை அறிவியலாளர்கள் விமர்சித்துள்ளனர்.

இவ்வாண்டின் இறுதியில் பாரிஸில் பருவநிலை தொடர்பான உலக உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், புவி வெப்ப வாயுக் குறைப்புக்கான இலக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவில் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கூடுதலான அளவில் புவி வெப்ப வாயுக்களைக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளன. 

ஆதாரம்: BBC / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.