2015-08-12 16:12:00

அமைதி ஆர்வலர்கள் : 1993ல் நொபெல் அமைதி விருது பாகம் 1


ஆக.12,2015. தென்னாப்ரிக்க கறுப்பு காந்தி நெல்சன் மண்டேலா அவர்களும், அவரை 27 ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்த அப்போதைய தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் Frederik Willem de Klerk அவர்களும் 1993ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டனர். தென்னாப்ரிக்காவில் நிறவெறிக் கோட்பாட்டு ஆட்சி அமைதியான முறையில் முடிவுக்கு வரவும், புதிய மக்களாட்சி தென்னாப்ரிக்கா மலரவும் இவ்விருவரும் ஆற்றிய பங்கைப் பாராட்டி இவ்விருது இவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆப்ரிக்காவின் மாபெரும் விடுதலையின் அடையாளம் என்று போற்றப்படும் இவர், தென்னாப்ரிக்காவில் முதன்முதலில் கறுப்பு இன வழக்கறிஞர்களாக பட்டம் பெற்றவர்களில் ஒருவர். 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை அரசுத்தலைவராக இருந்த இவர், அந்நாட்டின் முதல் கறுப்பின அரசுத்தலைவர் மற்றும் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசுத்தலைவராவார்.

நெல்சன் மண்டேலா அவர்கள், 1918ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி தென்னாப்பிரிக்காவின் குலு கிராமத்தில், Xhosa இனத்தில் Thembo பழங்குடி அரச இனத்தில் பிறந்தார். இவரது தந்தை இந்த இன மக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர்தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா. இவரது குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற இவர், இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். குத்துச் சண்டை உட்பட போர் புரியும் கலைகளையும் கற்றார். அக்காலத்தில் ஆப்ரிக்கர்கள் பள்ளிக்குச் செல்லும்போது பள்ளியில் அவர்களுக்கு ஆங்கிலப் பெயர் ஒன்று கொடுக்கப்படும். அவ்வாறு இவருக்கு வழங்கப்பட்ட பெயரே "நெல்சன்". இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியர் Mdingane அவர்களால் இப்பெயர் சூட்டப்பட்டது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் விருப்பம் கொண்ட மண்டேலா, இலண்டன் மற்றும் தென்னாப்ரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941ம் ஆண்டு ஜொகானஸ்பெர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார்.

1950களின் தொடக்கத்தில் ANC என்ற ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் இளையோர் பிரிவுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலை இயக்கமாக இருந்த இக்கட்சியை 1960ம் ஆண்டில் வெள்ளை இன அரசு தடை செய்தபோது, ஆயுதம் ஏந்திப் போராடுவது தவிர்க்க முடியாதது என்று உணர்ந்தார், அல்ஜீரியா, கியூபா ஆகிய நாடுகளின் கொரில்லாப் போர்களால் தூண்டப்பட்டு மறைந்திருந்து தாக்கும் இராணுவ   இயக்கத்தில் ஈடுபட்டு சேதங்களை ஏற்படுத்தினார். அரசத் துரோகம் மற்றும் நாட்டுக்கு எதிராகச் சதி செய்தார் என்ற குற்றச்சாட்டில் 1962ம் ஆண்டில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1964ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டுவரை 18 ஆண்டுகள் Robben தீவில் பல புரட்சித் தலைவர்களோடு அடைக்கப்பட்டார். தென்னாப்ரிக்காவில் நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடியவர்களை அந்நாட்டு அரசு இத்தீவிலிருந்த தனிமைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது. ஆனால், மண்டேலா அவர்கள் இச்சிறையில் கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றதால், 1990ம் ஆண்டில் விடுதலையாகி வரும்வரை மற்ற சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நெல்சன் மண்டேலா அவர்கள் தனது சிறைவாழ்வில் தென்னாப்ரிக்காவின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடுபவராகவும், உலகின் பெயர்போன அரசியல் கைதியாகவும் இருந்தார். உலக வரலாற்றில் இவரைப் போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. மண்டேலா அவர்கள் ராபன் தீவுச் சிறையில் இருந்தபோது தினமும் 10 மணி நேரம் பாறைகளை உடைத்ததாக சிறை அதிகாரி கிறிஸ்டோ பிராண்ட் தெரிவித்துள்ளார். இச்சிறையில் நாள்தோறும் நான்கு, நான்கு கைதிகளாக இரும்புச் சங்கிலியில் பிணைத்து கடினமான சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கச் செய்வது வழக்கம். அதன்படி, மண்டேலாவையும் சக கைதிகளோடு சங்கிலியில் பிணைத்து சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கச் செய்தனர். நாள்தோறும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மண்டேலா பாறைகளை உடைத்தார். வெள்ளை நிற சுண்ணாம்புப் பாறைகளோடு அவரது வாழ்க்கை பல ஆண்டுகள் உருண்டோடியது. இவர் பற்றிச் சொன்ன கிறிஸ்டோ பிராண்ட், அப்போது மண்டேலாவுக்கு 60 வயதிருக்கும். அவர் எப்போதும் தூய்மையாக உடை அணிந்திருப்பார். முடிந்தவரை அனைத்து கைதிகளுக்கும் உதவி செய்வார், 18 வயது நிரம்பிய என்னோடு நட்புடன் உரையாடுவார் என்று.

நெல்சன் மண்டேலா அவர்கள், சிறையின் நிலவரங்கள் குறித்து சிறை ஆணையர் ஜே.சி.ஸ்ரெயினுடன் பேசியபோது இப்படிச் சொன்னார். "இந்த நிறவெறிக்கெதிரான விடுதலைப் போரில் ஒருவர் வெற்றி பெறுவார். மற்றவர் தோல்வி காண்பார். ஆனால், போரின் பின்னர் நாட்டின் சாம்பல் மேட்டில் நின்றாவது வெற்றி பெற்றவரும் தோல்வி கண்டவரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசத்தான் வேண்டும். உங்களுக்கே வெற்றி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாமே வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால், பெருமளவான பகைவர்கள் என்ற வகையில் ஒருவரை மற்றவர் மதிப்பதற்கான வாய்ப்பை எம்மிடம் இருந்து பறித்து தவறிழைத்து விடாதீர்கள். இணக்கமான கருத்தைக் கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் நீங்களும் நாங்களும் எதிரிகளாக இருந்தாலும் உங்களை மதிப்பதற்கு ஒரு வாய்ப்பை எங்களுக்குத், தாருங்கள்"

அடக்குமுறை, போராட்டம், விடுதலை என்ற வார்த்தைகள் உச்சரிக்கப்படும்போது சொல்லப்படும் பெயர்களில் ஒன்று மண்டேலா. பகைவரையும் மதிப்பதற்கு வாய்ப்புக் கேட்ட ஆப்ரிக்கச் சிங்கம் அவர்களின் அரசியல் பயணம் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தொடர்ந்தது. அதன் பின்னர் பொது வாழ்விலிருந்து விலகுவதாக இவர் அறிவித்தார். இவர் தனது 95வது வயதில் 2013ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார்.

உலக அமைதிக்கு மண்டேலா அவர்கள் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு அமைதி விருது" வழங்கியது. 1990ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி அனைத்துலக விருதும் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1993ல் நொபெல் அமைதி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்கள் பிறந்த ஜூலை 18ம் தேதியை அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.

“உனது பகைவரோடு அமைதியை ஏற்படுத்த நீ விரும்பினால், உனது பகைவரோடு வேலை செய்ய வேண்டும். பின்னர் அவர் உனது உடன் பணியாளர் ஆகிவிடுவார்”. “ஒரு காரியத்தைச் செய்து முடிக்கும்வரை அது எப்போதும் இயலாததாகவே தெரிகின்றது” என்று சொன்னவர் நெல்சன் மண்டேலா. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.