2015-08-12 16:19:00

ISIS பிடியிலிருந்து, 22 அசீரிய கிறிஸ்தவர்கள் விடுதலை


ஆக.12,2015 இஸ்லாமிய அரசு என்று தன்னையே அழைத்துவரும் ISIS அடிப்படைவாதக் குழுவின் பிடியிலிருந்து, 14 பெண்கள் உட்பட, 22 அசீரிய கிறிஸ்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிரியாவின் Tal Tal Shamiram, Jazira என்ற கிராமங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 200க்கும் அதிகமான கிறிஸ்தவர்களில், 22 பேர், அப்பகுதிகளில் பணியாற்றும் அருள் பணியாளர்களின் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.

தற்போது ISIS தீவிரவாதிகளின் பிடியில் இன்னும் 187 பேர் உள்ளனர் என்றும், இவர்கள் ஒவ்வொருவருக்கும் பிணையத் தொகையாக ஒரு இலட்சம் டாலர்களை தீவிரவாதிகள் கேட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Hassaké என்ற பகுதியை ISIS தீவிரவாதிகள் கைப்பற்றிய வேளையில், அங்கிருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர் என்றும், அவர்களை, தீவிரவாதிகள், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் ஆசிய செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம்: AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.