2015-08-12 16:00:00

100வது ஆட்டைத் தேடிச் செல்லும் ஆயன், திருத்தந்தை


ஆக.12,2015 99 ஆடுகளை விட்டுவிட்டு, காணாமற்போன 100வது ஆட்டைத் தேடிச் சென்ற ஆயனைப் போல, தேவையில் உள்ளோரைத் தேடிச் செல்வது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குணம் என்று திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பாக இருக்கும் பேராயர் Konrad Krajewski அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் மாத வெப்பத்தினால், உரோம் நகரைவிட்டு பெரும்பாலான மக்கள் வெளியேறி இருந்தாலும், திருத்தந்தையின் தர்மப் பணிகளைத் தவறாது செய்துவரும் பேராயர் Krajewski அவர்கள், உரோம் நகரின் திபுர்தினா பகுதியில் உள்ள Baobab என்ற இல்லத்தில் தஞ்சம் அடைந்திருப்போருக்குத் தேவையான உணவுப் பொருள்களை இத்திங்களன்று வழங்கினார்.

உரோம் நகரில் பல்லாண்டுகள் தங்கியிருப்போராக இருந்தாலும் சரி, வெகு சில நாட்களுக்கு முன்னர் வந்திருக்கும் புலம்பெயர்ந்தோரானாலும் சரி, அவர்கள் அனைவரும் திருத்தந்தையின் பாராமரிப்பை உணர்ந்து வருகின்றனர் என்று பேராயர் Krajewski அவர்கள் எடுத்துரைத்தார்.

உணவுப் பொருள்கள் மட்டுமல்லாமல், வறியோர் பயன்படுத்தக்கூடிய மருந்துப் பொருள்களையும், தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடன் தான் தவறாமல் வழங்கிவருவதாக, பேராயர் Krajewski அவர்கள் கூறினார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.