2015-08-11 15:25:00

விவிலியத் தேடல் : தாலந்து உவமை – பகுதி - 5


மத்தேயு நற்செய்தி 25ம் பிரிவில் காணப்படும் தாலந்து உவமையில் நாம் சந்திக்கும் இறுதிச் சவாலை இன்றையத் தேடலில் சிந்திக்க வந்திருக்கிறோம். தன்னிடம் கொடுக்கப்பட்ட தாலந்தை பயன்படுத்தாமல், அதை நிலத்தில் புதைத்து வைத்த மூன்றாவது ஊழியரை தலைவர் கடிந்து கொள்கிறார். அவ்வூழியரைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுமாறு தலைவர் கட்டளையிடுகிறார். அவ்வேளையில், தலைவர் சொல்லும் வார்த்தைகள், நமது சிந்தனைக்குச் சவாலாக அமைகின்றன:

மத்தேயு நற்செய்தி 25: 28-30

அவருடைய தலைவர், “அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள்” என்று கூறினார்.

சமூகநீதி என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், தலைவர் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளாக ஒலிக்கின்றன. உள்ளவரிடமிருந்து செல்வங்களைப் பறித்து, இல்லாதோருக்கு கொடுக்கவேண்டும். ஆனால், நற்செய்தியின் இக்கூற்று, உள்ளவர் - இல்லாதோருக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை இன்னும் அதிகரிப்பதைப் போல் ஒலிக்கிறது. நற்செய்தியில் நாம் காணக்கூடிய கடினமான ஒரு பகுதி இதுவென்று சொன்னால் அது மிகையல்ல. எனவே, இந்தச் சொற்களின் பொருளை உணர்ந்துகொள்வது பயனளிக்கும்.

செல்வம் உள்ளவர் - இல்லாதோர் பற்றிய சமூக நீதி பாடங்களை நிலைநாட்ட, இயேசு, தாலந்து உவமையைச் சொல்லவில்லை என்பதை நாம் முதலில் உணரவேண்டும். அந்தக் கருத்தை, இயேசு, நற்செய்தியின் வேறு இடங்களில் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளவர், இல்லாதோர் என்று இயேசு இங்கு குறிப்பிடுவது, பொறுப்புக்களைப் பற்றியே தவிர, செல்வத்தைப் பற்றியல்ல என்பதை நாம் உணர்ந்தால், இவ்வரிகள் வழியே இயேசு சொல்லித்தர விழையும் பாடத்தைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வுலகில் நாம் காணும் நடைமுறைப் பழக்கத்தை எண்ணிப் பார்ப்போம். பொறுப்புடன் செயல்படுவோருக்கு கூடுதலாக பொறுப்புக்கள் வந்து சேருவதையும், பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வோரிடமிருந்து அனைத்து பொறுப்புக்களும் நீக்கப்படுவதையும் நாம் பார்த்ததில்லையா? இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, உவமையின் இறுதி வரிகள் எனக்குச் சொல்லித்தந்த விளக்கம் இதுதான்:

தங்களுக்கு வழங்கப்படும் கொடைகளில் கவனம் செலுத்தி, அவற்றில் மகிழ்வும், நிறைவும் அடைந்து, செயல்படுவோருக்கு, கூடுதலான பொறுப்புக்கள் வந்து சேரும். இதைத்தான் "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர்" என்ற இந்த வார்த்தைகள் சொல்வதாக நான் உணர்கிறேன்.

இதற்கு எதிர் துருவமாக இருப்பவர்கள், தங்கள் கொடைகளைப் பற்றி சிந்திக்காமல், தங்கள் குறைகளைப் பெரிதுபடுத்துபவர்கள். குறைகளிலேயே கவனம் அனைத்தையும் செலவிடுவதால், இவர்களது நிறைகளும் கொடைகளும் புதையுண்டு போகின்றன. அவர்களிடமிருந்து பொறுப்புக்களும் நீக்கப்படுகின்றன. "இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்ற வார்த்தைகள் இதைத்தான் கூறுவதாக நினைக்கிறேன். அதிகம் கொடுக்கப்பட்டவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் என்பதையும், இயேசு, லூக்கா நற்செய்தியில், 'விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்' என்ற உவமையின் இறுதியில் இவ்வாறு கூறியுள்ளார்:

லூக்கா 12: 48

மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.

தாலந்து உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பல பாடங்களை கடந்த சில வாரங்களாகச் சிந்தித்தோம். அவற்றில், இரு பாடங்களை இறுதியாக வலியுறுத்த விழைகிறேன்.

முதல் பாடம் - பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்த மனித சமுதாயத்தில், நாம் ஒவ்வொருவரும் தனித்திறமை உடையவர்கள். குறைகளையும் நிறைகளாக, திறமைகளாக மாற்றும் வழிகள் நமக்கு உண்டு என்பதைச் சொல்லித்தரும் பல்லாயிரம் பேர் இவ்வுலகில் வாழ்கின்றனர். தற்கொலை முயற்சியால் சக்கர நாற்காலியில் வாழவேண்டிய நிலைக்கு உள்ளான நான்சி என்ற இளம்பெண், அக்குறையை நிறைவாக மாற்றி, பல நூறு பேருக்கு உதவி வருவதைப் பற்றி இரு வாரங்களுக்கு முன் நாம் சிந்தித்தோம். இதோ, மற்றொரு நிகழ்வு...

மாணவர் விடுதி ஒன்றில், பார்வை இழந்த ஒரு மாணவர் புதிதாகச் சேர்ந்தார். அவரைக் கரம்பிடித்து அழைத்துச் செல்ல, நல்ல உள்ளங்கள் பலர் விடுதியில் இருந்ததால், சில மாதங்களில், அவர், கல்லூரி, விடுதி என்று, பழக்கப்பட்ட இடங்களிலெல்லாம், எந்தத் துணையும் இல்லாமல் தானாகவே சென்றார். ஒரு நாள், விடுதியில், இரவு உணவு நடைபெற்ற நேரத்தில், மின் தடை ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தபோது, பார்வை இழந்த இவர் மட்டும் தயக்கமின்றி எழுந்து, தன் நண்பர்களை அந்த இருளில் உணவு அரங்கத்திலிருந்து வழி நடத்திச் சென்றார்.

பார்வைத் திறன் அற்றோரும் பாதை காட்ட முடியும் என்பதற்கு, உலகப் புகழ்பெற்ற ஹெலன் கெல்லர் (Helen Keller) அவர்கள், தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டு. குழந்தைப் பருவத்தில் வந்த ஒரு நோயினால், பார்க்கும் திறனையும், கேட்கும் திறனையும் இழந்த ஹெலன், பேசும் திறனையும் வளர்த்துக்கொள்ள முடியாமல் தவித்தார். இருப்பினும், ஆன் சல்லிவன் (Anne Sullivan) என்ற ஓர் அற்புத பெண்ணால் இவர் வழிநடத்தப்பட்டார். கல்லூரிப் படிப்பை முடித்து, பட்டம் பெற்ற முதல் மாற்றுத் திறனாளி என்ற வரலாற்றை உருவாக்கிய ஹெலன் கெல்லர் அவர்கள், பார்க்கும் திறன் பற்றி கூறியுள்ளது சிந்திக்க வேண்டியது:

"பார்க்கும் திறன் பெற்ற பலருடன் நான் பயணிக்கிறேன். ஆனால், அவர்கள் கடலிலும், வானிலும் எதையும் காண்பதில்லை. வெறும் பார்க்கும் திறன் பெற்றதால் திருப்தியடைந்துவிடும் இவர்களைவிட, பார்வையற்ற ஒளியில் நான் பாய்மரம் விரித்துச் செல்வது எவ்வளவோ மேல்."

இரண்டாவதாக நாம் சிந்திக்கும் பாடம், திறமையையும், நேர்மையையும் இணைக்கும் முக்கியப் பாடம். வெற்றி பெறுவதற்கு, திறமைகள் மட்டும் போதாது, கூடவே, நேர்மையற்ற, குறுக்கு வழிகளில் செல்லும் துணிவும் தேவை என்ற பாடங்கள், இன்றைய உலகில் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு மாறாக, நேர்மைக்கும், திறமைக்கும், அயரா உழைப்புக்கும், இவ்வுலகில் இன்னும் இடம் உண்டு என்பதை இயேசு இவ்வுவமை வழியே நமக்கு நினைவுபடுத்துகிறார். இந்த உண்மையை வலியுறுத்தும் ஒரு கதையுடன் 'தாலந்து உவமை'யில் நம் தேடலை நிறைவு செய்வோம்.

புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த முதலாளிக்கு வாரிசு யாருமில்லை. எனவே தன் நிறுவனத்தை நடத்துவதற்குத் தகுதியான ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க விரும்பினார். தன் நிறுவனத்தில், பொறுப்பான நிலையில் பணியாற்றிய இளம் ஊழியர்கள் இருபது பேரை ஒரு நாள் அழைத்தார். அவர்களிடம், "இளம் நண்பர்களே, நான் நிறுவனப் பொறுப்பிலிருந்து ஒய்வு பெற விழைகிறேன். எனக்கு வாரிசு யாருமில்லை என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, உங்களில் ஒருவரை நான் முதலாளியாக்க விரும்புகிறேன்" என்று அவர் கூறியதும், இளையோர் மத்தியில் ஆனந்த அதிர்ச்சி அலைகள் உருவாயின. முதலாளி தொடர்ந்து பேசினார்: "உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு விதையைத் தரப்போகிறேன். இது மிகவும் சிறப்பு மிக்க விதை. இதை எடுத்துச் சென்று, மண்ணில் ஊன்றி, நீர் ஊற்றி வளர்த்து வரவேண்டும். ஓராண்டு சென்று நாம் மீண்டும் சந்திப்போம். அப்போது, இப்பணியை யார் நல்ல முறையில் முடித்திருக்கிறீர்களோ, அவரை நான் என் வாரிசாக தேர்ந்தெடுப்பேன்" என்று சொல்லி ஆளுக்கொரு விதையைக் கொடுத்தார்.

இளம் ஊழியர்களில் ஒருவரான ஜேம்ஸ், அன்று மாலை வீட்டுக்குச் சென்றதும், தன் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி, அவரிடம் அந்த விதையைக் கொடுத்தார். அவர்கள் பெரியதொரு தொட்டி வாங்கி, மண்ணும் உரமும் இட்டு, அந்த விதையை அதில் நட்டு, ஒவ்வொரு நாளும் நேரம் தவறாமல் நீர் ஊற்றி வந்தனர். ஒரு மாதமாகியும், தொட்டியில் நடப்பட்ட விதையில் எவ்வித மாற்றமும் இல்லை. பணித்தளத்திலோ, ஏனைய ஊழியர்கள், தங்கள் விதைகள் வளர்ந்து வருவதைக் குறித்து ஒவ்வொரு நாளும் கதை கதையாக சொன்னார்கள். ஜேம்ஸின் கலக்கம் ஒவ்வொரு நாளும் கூடியது. ஆறு மாதங்கள் சென்றன, ஓராண்டும் உருண்டோடியது. ஜேம்ஸ் நட்டுவைத்த விதையில் எவ்வித மாற்றமும் தோன்றவில்லை.

ஓராண்டுக்குப்பின், முதலாளி குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. அன்று ஜேம்ஸ் வேலைக்குப் போக விரும்பவில்லை. முதலாளி கொடுத்த விதையை தன்னால் வளர்க்க முடியவில்லை என்ற தன் இயலாமையை வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. ஆனால், அவரது மனைவி அவரிடம், "நீங்கள் நடந்ததை அப்படியே முதலாளியிடம் கூறுங்கள். அதனால் வரும் விளைவை நாம் சந்திப்போம்" என்று தைரியம் சொல்லி அனுப்பினார்.

அலுவலகத்திற்கு தன் தொட்டியை எடுத்து வந்த ஜேம்ஸ் அங்கு ஏனைய ஊழியர்கள் வைத்திருந்த தொட்டிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றிலும் வகை, வகையான சிறு மரங்கள் பல்வேறு வண்ணங்களில் காட்சியளித்தன. ஜேம்ஸ் தன் தொட்டியை ஓரமாகக் கொண்டுபோய் வைத்தார். அதைக் கண்ட மற்ற ஊழியர்கள், ஜேம்ஸை எள்ளி நகையாடினர்.

முதலாளி அந்த அறைக்குள் வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து தொட்டிகளையும் வரிசையாகப் பார்வையிட்டார். இறுதியில் ஜேம்ஸ் வைத்திருந்த தொட்டியையும் பார்த்தார். அது யாருடையது என்று அவர் கேட்டதும், ஜேம்ஸ் அச்சத்துடன் முன் வந்தார். கொடுக்கப்பட்டப் பணியைச் சரிவரச் செய்யவில்லை என்பதற்காக தன்னை பணிநீக்கம் செய்யப்போகிறார் என்று அஞ்சியபடியே அவர் முதலாளியை அணுகினார். அந்தத் தொட்டியில் ஏன் எதுவும் வளரவில்லை என்று முதலாளி ஜேம்ஸிடம் விளக்கம் கேட்டார். ஜேம்ஸ் கடந்த ஓராண்டளவாய் தானும், தன் மனைவியும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் எடுத்துச் சொன்னார். தங்கள் முயற்சிக்கு ஏன் பலன் கிடைக்கவில்லை என்பது தெரியவில்லை என்பதையும் கூறினார்.

உடனே, முதலாளி, ஜேம்ஸ் தோள் மீது கைவைத்து அவரை அணைத்தபடி, "இதோ, என் வாரிசு, உங்கள் முதலாளி!" என்று கூறினார். மற்ற ஊழியர்கள் அதிர்ந்து நின்றனர். அப்போது முதலாளி தொடர்ந்தார்: "நண்பர்களே, சென்ற ஆண்டு இதே நாள் உங்களை நான் சந்தித்தபோது, உங்களுக்கு ஒரு விதை கொடுத்தேன். அந்த விதை சிறப்பான விதை என்றும் சொன்னேன். அந்த விதையின் சிறப்பு இதுதான். நான் உங்கள் அனைவருக்கும் கொடுத்த விதை, ஏற்கனவே வேகவைக்கப்பட்ட விதை. எனவே, அதில் உயிர் கிடையாது. அது வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. நான் கொடுத்த விதை வளரவில்லை என்பதை அறிந்த நீங்கள் அனைவரும், அந்த விதையை எடுத்துவிட்டு, வேறொரு விதையை நட்டு, வளர்த்துவிட்டீர்கள். ஜேம்ஸ் மட்டுமே நான் கொடுத்த விதையை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். நேர்மை தவறாமல் செயல்பட்டு, உண்மையையும் மறைக்காமல் ஒத்துக்கொண்ட இவர்தான் என் நிறுவனத்தின் பொறுப்பாளர்" என்று கூறினார். திறமையும், நேர்மையும் கரம்கோர்த்து செல்லும்போது, தடைகள் அனைத்தும் தலைவணங்கி வழிவிடும்.

ஒருவர் பெற்றுள்ள திறமைகளைக் கொண்டு வாழ்வில் எவ்விதம் உயர முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர், மறைந்த மாமனிதர், அப்துல் கலாம் அவர்கள். திறமைகளையும், அவற்றை வளர்க்க நாம் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகளையும் குறித்து, அந்த மேதை விட்டுச் சென்ற மூன்று பொன்மொழிகளுடன் தாலந்து உவமையில் நாம் கடந்த சில வாரங்களாக மேற்கொண்ட தேடலை நிறைவு செய்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.