2015-08-11 16:11:00

மத்திய கிழக்கில் கண்முன்னே திருஅவை மறைந்து வருகிறது


ஆக.11,2015. மத்திய கிழக்குப்பகுதி கிறிஸ்தவர்க்குத் தேவைப்படும் அடிப்படை பாதுகாப்பு கொடுக்க இயலாமல் அப்பகுதி திருஅவை உள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார் அப்பகுதியின் மூத்த திருஅவை அதிகாரி ஒருவர்.

ஈராக்கின் எர்பில் பேராயர் Bashar Matti Warda அவர்கள், பீதெஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், மத்திய கிழக்கில் பழங்காலத்திலிருந்தே வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்கள், அப்பகுதி கிறிஸ்தவ சபைகளின் கண்முன்னே அவ்விடங்களைவிட்டுச் செல்கின்றனர் என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்குத் திருஅவை, தனது உறுப்பினர்களின் கண்முன்னே மறைந்து வருகிறது என்றும், கிறிஸ்தவர்கள் தாங்கள் வெறுக்கப்படும் இடங்களிலிருந்து பெருமளவில் வெளியேறி வருகின்றனர் என்றும் கூறினார் பேராயர் Warda.

கிறிஸ்தவர்களாக வாழ விரும்புவதால், கிறிஸ்தவர்கள் வெறுக்கப்படுகின்றனர் என்றும், கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்து நசுக்கப்படுவதைக் காண்பது வேதனையை இரட்டிப்பாக்குகின்றது என்றும் தெரிவித்தார் கல்தேய வழிபாட்டுமுறை பேராயர் வார்தா.

துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு கல்தேயத் திருஅவை இலவச மருத்துவப் பணிகளை வழங்கி வருவதாகவும், இந்தியாவிலிருந்து வந்துள்ள திருஇதய சபை சகோதரிகள் நடத்தும் புனித வளன் மருத்துவமனையில் 12 இளம் மருத்துவர்கள் ஒரு மாதத்தில் இரண்டாயிரம் நோயாளிகள் வீதம் உதவி வருகின்றனர் எனவும் கூறினார் பேராயர் Warda.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.