2015-08-10 16:11:00

நம் இதயங்கள் இறைஆவியின் செயல்பாடுகளுக்கு திறந்தவைகளாக இருக்க


ஆக.10,2015. தான் ஆற்றிய புதுமையைக் கண்டு தன்னை மன்னராக்க விரும்பிய மக்களை நோக்கி, இயேசு, வாழ்வு தரும் உணவு நானே என்று கூறியதையும், அதற்கு மக்கள் முணுமுணுத்ததையும் குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

என்னில் விசுவாசம் கொள்பவர் முடிவற்ற வாழ்வைப் பெறுவர் என்று இயேசு கூறிய வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது விசுவாசத்தின் நிலையையும் மனிதருக்கும் இயேசுவுக்கும் உள்ள தொடர்பையும் எடுத்துரைக்கின்றது என்றார்.

இயேசுவில் விசுவாசம் கொள்ள அவரைச் சந்தித்தால் மட்டும் போதாது, நற்செய்தியையும் வாசிக்க வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, அருஞ்செயல்களைக் காண்பது மட்டும் முக்கியமல்ல,  நம் இதயங்கள், இறை ஆவியின் செயல்பாடுகளுக்கு திறந்தவண்ணம் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

நம் இதயங்களில் விதைக்கப்படும் விதையாக இருக்கும் விசுவாசம், நம்மில் பூத்துக் குலுங்கி, இயேசுவை நோக்கி இறைவனால் கவரப்படுகின்றது, அவ்வாறு நாம் திறந்த மனதுடன் செல்லும்போது, அவர் முகத்தில் இறைமுகத்தையும் அவர் வார்த்தைகளில் இறைவார்த்தையையும் காண்கின்றோம் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.