2015-08-10 16:41:00

கோவில்கள் எரிக்கப்பட யூத ரபியின் அழைப்பையொட்டி அச்சம்


ஆக.10,2015. இஸ்ரேயலில் மத விரோதப் போக்குகளைத் தூண்டிவரும் யூத மத ரபி Benzi Gopsteinன் செயல்பாடுகளை அந்நாட்டு அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், புனித பூமியின் கத்தோலிக்கத் தலைவர்கள்.

யூத மத சட்டத்தின்படி, சிலை வழிபாட்டுத் தலங்களை தீயிட்டுக் கொளுத்துவது நியாயமானதே என்ற கருத்துக்களைப் பரப்பி, இனவெறியாளர்களாகவும், அரபு அமைப்பின் எதிர்ப்பாளர்களாகவும் செயல்படும் Lehava என்ற யூத குழுவுக்குத் தலைமை தாங்கும் யூத மத ரபி Gopstein,  கிறிஸ்தவக் கோவில்களும் இஸ்லாமிய மசூதிகளும் எரிக்கப்படுவதற்கு தன் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

ரபியின் இத்தகைய விரோதப் போக்குகள், இஸ்ரேயலில் உள்ள கிறிஸ்தவக் கட்டிடங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன எனவும், இஸ்ரேயல் வாழ் கிறிஸ்தவர்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர் எனவும் கூறியுள்ள புனிதபூமி கிறிஸ்தவத் தலைவர்கள், இஸ்ரேயல் காவல்துறையிடம் இது குறித்த புகாரையும் பதிவுச் செய்துள்ளனர். 

ஆதாரம் : CWN/AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.