2015-08-10 15:25:00

கடுகு சிறுத்தாலும் – தவறை நியாயப்படுத்த சாக்குப்போக்குகள்!


அந்த வீட்டில் அந்த மனிதர் சாராயம் குடிப்பார், சிகரெட் பிடிப்பார், சூதாடுவார். இப்படி சில தீய பழக்கங்கள் உள்ளவர் அவர். அதனால் அவரின் மனைவிக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி வாய்ச் சண்டை நடக்கும். குடிக்காதே, சிகரெட் பிடிக்காதே, சூதாடாதே என்று அவரது மனைவி சில நேரங்களில் அழுது மன்றாடுவார், கெஞ்சிக் கேட்பார், சில நேரங்களில் வார்த்தைகளால் விளாசுவார். ஒருநாள் தெருவில் ஒல்லியான ஒரு மனிதர் நீண்ட தாடியுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார் அந்தக் கணவர். அந்த மனிதரிடம், நீ குடிப்பாயா? நீ சிகரெட் பிடிப்பாயா? சூதாடுவாயா? என்று கேட்டார் அவர். இவற்றில் நான் எதையுமே செய்ய மாட்டேன் என்றார் அந்தப் பிச்சைக்காரர். சரி, என்னோடு எனது வீட்டுக்கு வா, உனக்கு நூறு ரூபாய் தருகிறேன் என்று வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரைக் கண்டதும், அவரின் மனைவி அவரிடம், பிச்சைக்காரரை வீட்டுக்கு ஏன் அழைத்து வந்தீர்கள் என்று கோபமாகக் கேட்டார். இல்லை என் கண்ணே, நீ என்னை குடிக்காதே, சிகரெட் பிடிக்காதே, சூதாடாதே என்று சொல்லி அடிக்கடி என்னோடு சண்டை போடுகிறாய் அல்லவா, இந்தப் பிச்சைக்காரர் இவற்றில் எதையுமே செய்வதில்லையாம், ஆனாலும் இவரின் நிலையைப் பார் என்று சொன்னார்.

* தவறுகளை நியாயப்படுத்த எத்தனை எத்தனை எடுத்துக்காட்டுகள், எத்தனை எத்தனை சாக்குப்போக்குகள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.