2015-08-08 15:20:00

தமிழகத்தில் முழு மது ஒழிப்புக்கு ஆயர்கள் விண்ணப்பம்


ஆக.08,2015. தமிழ் நாட்டில் மதுபானம் விற்பனையால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன மற்றும் தற்கொலைகளுக்கும் இது காரணமாகின்றது என்று சொல்லி, மதுபான விற்பனை தடை செய்யப்படுமாறு தமிழக ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் மது ஒழிப்பு போராட்டங்கள் மாநில அளவில் வலுவடைந்துவரும்வேளை, அப்போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார் தமிழக ஆயர் பேரவைத் தலைவரும், கோட்டாறு மறைமாவட்ட ஆயருமான ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்.

மதுபானங்களால் ஏற்படும் கடும் பாதிப்பை நோக்க வேண்டிய நேரம் அரசுக்கு வந்துள்ளது என்றும், ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் குடிக்கும் மதுபானங்கள் மீதான தடையை அமல்படுத்துமாறும் கேட்டுள்ளார் ஆயர் ரெமிஜியுஸ்.

தமிழக அரசு, ஏழை மக்கள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருந்தால், மாநிலம் அளவில் முழு மதுபானத் தடையைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ள ஆயர் ரெமிஜியுஸ் அவர்கள், மதுபானம், மக்களின் மனிதத்தைக் குலைத்து, சமுதாயத்தின் நிலையான தன்மையைச் சிதைக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கடற்கரைப் பகுதி மக்களுள் 56 விழுக்காட்டினர் குடிகாரர்கள். மேலும், 2013ம் ஆண்டில் தமிழகத்தில் இடம்பெற்ற 16,927 தற்கொலைகளில் 30 முதல் 35 விழுக்காடு, மதுபானம் தொடர்புடையவை என்று, சிநேகா தற்கொலை தடுப்புக் குழுவின் இலட்சுமி விஜயகுமார் தெரிவித்தார்.

ஏழே கால் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் மது விற்பனை 26 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், இந்தியாவில் அதிக மக்கள்தொகை மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் மது விற்பனை 11 ஆயிரம் கோடி ரூபாய். உத்திரப்பிரதேச மக்கள் தொகை 21 கோடியாகும்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.