2015-08-08 15:39:00

ஐ.எஸ். அரசு கிறிஸ்தவர்களை சிரியாவைவிட்டு வெளியேற்றுகின்றது


ஆக.08,2015. ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய அரசுக்காகச் சண்டையிடும் தீவிரவாதிகள், சிரியாவைவிட்டு கிறிஸ்தவர்களை வெளியேற்றும் வழிகளைத் தேடுகின்றனர் மற்றும் அவர்கள் எல்லா இடங்களிலும் அச்சத்தை விதைக்கின்றனர் என்று தெரிவித்தார் அலெப்போ ஆயர் Antoine Audo.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், சிரியாவின் Qaryatain நகரை இவ்வாரத்தில் கைப்பற்றிய பின்னர், பெண்கள், சிறார் உட்பட பல கிறிஸ்தவர்களைக் கடத்தியதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, அலெப்போ ஆயர் Antoine Audo அவர்கள் இவ்வாறு கூறினார்.

Qaryatain நகரில் கடத்தப்பட்டுள்ள 230 பேரில் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள். மேலும், ஏறக்குறைய 170 பேர் சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்நகரில் மோதல்கள் தொடங்குவதற்கு முன்னர் சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 18 ஆயிரம் பேரும், ஏறக்குறைய இரண்டாயிரம் கிறிஸ்தவர்களும் இருந்தனர். தற்போது இங்கு 180 பேரே உள்ளனர். ஆனால் கிறிஸ்தவர்களும் யாருமில்லை.  

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சண்டை தொடங்கியதிலிருந்து ஏறக்குறைய 2,40,000 பேர் இறந்துள்ளனர். 32 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் 76 இலட்சம் பேர் நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.