2015-08-08 15:14:00

இறைவனின் இரக்கத்தால் மாற்றம் அடைய நம்மை அனுமதிப்போம்


ஆக.08,2015. “நாம் அனைவரும் பாவிகள். இறைவனின் இரக்கத்தால் மாற்றம் அடைய நம்மை அனுமதிப்போம்”என்ற வார்த்தைகளை இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மறைசாட்சி ஆயர் Flaviano Michele Melki அவர்களை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தும் விதமாக, அவரின் வீரத்துவமான வாழ்வுக்கு ஒப்புதல் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர் நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து மறைசாட்சி ஆயர் Flaviano Michele Melki அவர்கள் பற்றிய விபரங்களைச் சமர்ப்பித்தார்.

புனித எப்ரேம் சகோதரத்துவ சபையின் Djézireh ஆயராகிய இறையடியார் Melki அவர்கள், தற்போதைய துருக்கியிலுள்ள Kalaat Maraவில் 1858ம் ஆண்டு பிறந்தார். 1915ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி தற்போதைய துருக்கியிலுள்ள Djézirehல் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டார்.

மேலும், பிரான்சின் Créteil மறைமாவட்டத்தில் புதிய பேராலயத் திறப்பு நிகழ்வுக்கு, பாரிஸ் பேராயர் கர்தினால் André Vingt-Trois அவர்களைத் தனது பிரதிநிதியாக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாரிசின் தென்கிழக்கே, புறநகர்ப் பகுதியிலுள்ள இப்புதிய பேராலய திறப்பு நிகழ்வு, வருகிற செப்டம்பர் 20ம் தேதி நடைபெறவுள்ளது.

இன்னும், குரோவேஷிய குடியரசின் Sinj புதுமை மாதா திருத்தலத்தின் 300ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்கென, தனது பிரதிநிதியாக, சாக்ரெப் பேராயர் கர்தினால் Josip Bozanić அவர்களைத் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Spalato-Makarska உயர் மறைமாவட்டத்திலுள்ள Sinj புதுமை மாதா திருத்தலத்தின் 300ம் ஆண்டு நிறைவு நிகழ்வு இம்மாதம் 15ம் தேதி இடம்பெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.