2015-08-07 16:27:00

பாகிஸ்தானில் இராணுவ நீதிமன்றங்கள் அதிகரிப்புக்கு ஆயர் கவலை


ஆக.07,2015. பாகிஸ்தானில் அரசுக்கு எதிராகப் போராடுகிறவர்களை ஒடுக்குவதற்கென புதிய இராணுவ நீதிமன்றங்கள் உருவாக்கப்படுவது, மரண தண்டனை தீர்ப்புகளைத் துரிதப்படுத்தும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் குறை கூறியுள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களை விசாரிப்பதற்கென புதிய இராணுவ நீதிமன்றங்கள் உருவாக்கப்படுவதற்கு அரசியல் அமைப்பில் மாற்றம் கொணருவதற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இப்புதனன்று ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இந்நடவடிக்கைக்கு, தலத்திருஅவை உட்பட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்களும், வழக்கறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அரசியல்வாதிகளின் இத்தீர்மானம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தானின் ஹைதராபாத் ஆயர் Samson Shukardin அவர்கள், நியாயமான தீர்ப்பு, துரித நடவடிக்கையில் வழங்கப்பட முடியாது என்று கூறினார்.

ஒவ்வொருவரும் அரசு நீதிமன்றங்களில் எவ்வித வற்புறுத்தலுமின்றி தங்களின் வழக்கைத் தாக்கல் செய்வதற்கு உரிமை கொண்டுள்ளனர் என்றுரைத்த ஆயர் Shukardin அவர்கள், துரித விசாரணைகளும், தூக்குத் தண்டனைகளும் நீதிக்கு உறுதியளிக்க முடியாது என்றும் கூறினார்.

மரண தண்டனை, மனித வாழ்வின் தூய்மை மற்றும் மாண்புக்கு எதிரானது என்று சொல்லி, அதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பதையும் சுட்டிக்காட்டினார் ஆயர் Shukardin.

        

ஆதாரம் : AFP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.