2015-08-07 16:23:00

சிரியாவில் போர் தொடங்கியதிலிருந்து 2,40,000 பேர் மரணம்


ஆக.07,2015. சிரியாவில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை, ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் சிறார் உட்பட இரண்டு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.

இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும், சிரியாவில் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொல்லப்பட்டுள்ள இம்மக்களில், ஏறக்குறைய 72 ஆயிரம் பேர் அப்பாவி பொது மக்கள் என்றும், 88 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இராணுவத்தினர் என்றும், ஏறக்குறைய 34 ஆயிரம் பேர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசுத்தலைவர் அசாத் அரசுக்கும், பல்வேறு எதிர்தரப்புகளுக்கும் இடையே சண்டை ஆரம்பித்ததிலிருந்து 2,40,381 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 11,964 பேர் சிறார். 42,384 பேர் இராணுவத்தினர். 34,375 பேர் வெளிநாட்டு ஜிகாதிகள். மேலும், இறந்துள்ள 3,225 பேர் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், ஐ.நா.வின் கணிப்புப்படி, ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். குறைந்தது நாற்பது இலட்சம் பேர், சிரியாவின் அண்டை நாடுகளான  துருக்கி, லெபனான், ஜோர்டன் மற்றும் ஈராக்கில் தஞ்சம் தேடியுள்ளனர். இன்னும், 1,50, 000 பேர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இன்னும், 65 இலட்சம் பேர் நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.