2015-08-07 16:19:00

கிழக்கு தீமோரும் திருப்பீடமும் ஆகஸ்ட் 15ல் வரலாற்று ஒப்பந்தம்


ஆக.07,2015. கிழக்கு தீமோர் நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படும் இம்மாதம் 15ம் தேதியன்று, கிழக்கு தீமோர் நாடும், திருப்பீடமும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவுள்ளன.

ஆசியாவில் புதிய நாடாகவும், உலகில் அதிகமான கத்தோலிக்கரைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகவும் விளங்கும் கிழக்கு தீமோரில் 1615ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் வந்திறங்கியதன் 500ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், கிழக்கு தீமோர் அதிகாரிகளும் கையெழுத்திடவுள்ள இவ்வொப்பந்தம், திருப்பீடத்திற்கும், வெளிநாடுகளுக்கும் இடையே சட்டமுறையான உறவுகளை உருவாக்குவதாகும். இத்தகைய ஒப்பந்தம், முதலில் 1107ம் ஆண்டில், இங்கிலாந்து அரசர் முதலாம் ஹென்ரி அவர்களுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே இலண்டனில் கையெழுத்திடப்பட்டது.

இவ்விழாவை முன்னிட்டு UCA செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த கிழக்கு தீமோர் பிரதமர் Rui Maria de Araujo அவர்கள், கத்தோலிக்கமும், போர்த்துக்கீசிய மொழியும், கிழக்கு தீமோரை ஒரு நாடாக வடிவமைத்தன என்று கூறியுள்ளார்.

கடந்த 500 ஆண்டுகளாக, கத்தோலிக்கத் திருஅவை, கிழக்கு தீமோர் மக்களுக்கு மாபெரும் ஆன்மீக, மனித மற்றும் பொருளாதார ஆதரவை வழங்கியுள்ளது என்றும், கிழக்கு தீமோர் சுதந்திரம் பெறுவதற்கான நடவடிக்கைகளில் கத்தோலிக்கத் திருஅவை பெரும் பங்கு ஆற்றியுள்ளது என்றும் பாராட்டினார் பிரதமர் Araujo.

போர்த்துக்கீசியர்கள் கிழக்கு தீமோரிலிருந்து சென்ற பின்னர், அந்நாடு 1975ம் ஆண்டுவரை இந்தோனேசியாவின் ஆக்ரமிப்பின்கீழ் இருந்து, பின்னர் 2002ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.